கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வட்டம், கூடலூர் பேரூராட்சிக்குட்பட்டது வட்டப்பாறைகிராமம். கட்டாஞ்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த கல்குவாரிகளால் ஆங்காங்கே பயன்பாட்டில் இல்லாத கல்குழிகள் காணப்படுகின்றன. வெடி வைத்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இந்த ஆழமான கல்குழிகள் தற்போது குப்பைக்குழிகளாக மாற்றப்பட்டு விட்டன. கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பை கழிவுகளும் தற்போது வட்டப்பாறை கிராமத்தில் உள்ள கல்குழியிலேயே கொட்டப்பட்டு வருகின்றன.

சாலையோரத்தில் உள்ள இக்கல்குழிக்குள் பேரூராட்சி நிர்வாகமே தினசரி லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டி வருவதால் கடும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருவதாக வட்டப்பாறை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி வருவதால் இப்பகுதியை சுற்றி இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் இரவு நேரங்களில் இங்கேயே கொட்டப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இக்கிராமத்தில், நிலப்பகுதில்யில் இருந்து இருநூறு அடிக்கும் அதிகமான ஆழ முள்ள கல்குழிக்குள் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைத்து விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் புகார் மனுக்கள்அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. கல்குழிக்குள் கழிவுகள்கொட்டும் பணி தொடர்கிறது என அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதேபோல், இக்கல்குழிக்கு அருகிலேயே மழைநீர் சேமிப்பு குட்டை இருப்பதோடு இதுவே மழைக்காலங்களில் மழைநீர் பவானியாற்றை சென்றடையும் நீர்வழிப்பாதையாகவும் இருக்கின்றது. இப்படி பல்வேறு வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்கும் இப்பிரச்னை குறித்து கூடலூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, வட்டப்பாறை கிராம மக்களிடமிருந்து இது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.  அதேநேரம், இவ்வாறு ஒவ்வொரு முறையும் பெயரளவிற்கு உறுதியளித்துவிட்டு பின்னர் கண்டும் காணாமல் இருப்பது போல் அதிகாரிகள் இருக்காமல், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் விவசாயத்தை பாழ்படுத்தும் வகையில் கல்குவாரி குழிக்குள் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆபத்தான வகையில் எவ்வித தடுப்புக்களுமின்றி காணப்படும் பயன்படுத்தபடாத கல்குழிகள் மூடப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

-இரா.சரவணபாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.