திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 14ஆவது வார்டு அமர்ஜோதி கார்டன் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் கொடுத்த வாக்குறுதியை மீறி கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலம்பாளையம் – சிறுபூலுவபட்டி சாலையில் அமர்ஜோதி கார்டன் குடியிருப்புக்கு எதிரில் தனியார் இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வட்டாரத்தில் இருக்கும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர், கலால் துணை ஆணையர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் மதுக்கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்களுக்குத் தெரியவந்தது. அதிகாரிகள் வாக்குறுதி அளித்த நிலையில் மீண்டும் கடை திறக்க முயற்சிப்பதைக் கண்டித்து பெண்கள் உள்பட பொது மக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்ததோர் அமர்ஜோதி கார்டன் பகுதியில் போராட்டத்துக்கு ஆயத்தமாகி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது காவல் துறையினர் இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றனர். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போதும் மேற்படி இடத்தில் மதுக்கடை வராது என்று உறுதியளித்தனர். வாக்குறுதி அளித்த பிறகும், திறக்கப்படாத கடையை எதிர்த்து ஏன் போராடப் போகிறீர்கள் என்றும் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போது கேள்வி எழுப்பினர். அந்த சமயத்தில் டாஸ்மாக் மேலாளரும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதியளித்தார். மீண்டும் கடை அமைக்க முயற்சி செய்யப்படுமா என்று கேட்டபோதும், இப்போதைக்குக் கிடையாது என்றே பதில் கொடுத்தார். டாஸ்மாக் கடை வராது என்று அனைத்து அதிகாரிகள் தரப்பிலும் உறுதியளிக்கப் பட்டதால் அனைவரும் கலைந்தனர்.

இந்நிலையில் திடீரென அமர்ஜோதி கார்டனுக்கு எதிரில் உள்ள தனியார் இடத்தில் அவசர அவசரமாக கடந்த ஓரிரு நாளுக்குள்ளாக ஒரு அறை கொண்ட கட்டிடம் ஏற்படுத்தப்பட்டது. திடீரென வியாழக்கிழமை மாலை அங்கு சிலர் காரில் வந்து பூஜை செய்து கடையைத் திறந்துள்ளனர். மேலும் மதுபான பெட்டியைக் கொண்டு வந்து வைத்து “குடிமகன்களை” வரவழைத்து இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது எனச்சொல்லி மதுபானங்களை வழங்கியுள்ளனர். இந்த விபரம் தெரியவந்ததுடன் மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் ஏமாற்றி விட்டதாக தெரிந்து இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் வெள்ளிக்கிழமை காலை குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமர்ஜோதி கார்டன் முன்பாக திரண்டனர்.

அதேசமயம் மக்களை ஏமாற்றி கள்ளத்தனமாக திறக்கப்பட்ட மதுபானக் கடைக்குப் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை காலையே இப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் காவல் துறையினர் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அரசு நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை மீறி மதுக்கடை திறந்ததைக் கண்டித்து முற்றுகையிடுவதற்கு ஏராளமானோர் திரண்டனர். அப்போது காவல் துறையினர், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுவிட்ட நிலையில் அதிகாரிகள் விதிமுறைகளை ஆய்வு செய்துதான் இந்த கடையைத் திறந்துள்ளனர். எனவே இதை எதிர்த்துப் போராடக் கூடாது, போராடினால் கைது செய்வோம்! என்று மிரட்டினர்.தொடக்கத்தில், “டாஸ்மாக் கடையே வராது ஏன் போராடுகிறீர்கள்” என்று போராடுவதைத் தடுத்த காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், இப்போது கள்ளத்தனமாக கடையைத் திறந்துவிட்டு “விதிமுறைப்படி தான் இக்கடை திறக்கப்பட்டுள்ளது, எனவே போராடக் கூடாது” என்று மிரட்டலில் ஈடுபடுவது அரசு நிர்வாகத்தின் இரட்டை வேடத்தையும், பொதுமக்களுக்கு எதிராக ஆளும் கட்சி மதுபான பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கையும் அம்பலப்படுத்திக் காட்டுவதாக பொதுமக்கள் சாடினர்.

“மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் நிர்வாகமும் கொடுத்த வாக்குறுதியை மீறி இந்த கடை திறக்கப்படுவதை எதிர்த்தும், மீறி திறக்கப்பட்டால் மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம்! என்றும் அரசியல் கட்சியினரும், குடியிருப்போர் சங்கத்தாரும் திரண்டு மதுக்கடை அமையும் பகுதியில் பிளக்ஸ் தட்டியைக் கட்டினர். அதைத் தடுக்கவும் காவல் துறையினர் மிரட்டலில் ஈடுபட்டனர். அதை மீறி எதிர்ப்பு தட்டி வைக்கப்பட்டது. மேலும் இந்த கடைக்கு எதிராக சுற்று வட்டார மக்களைப் பெரும் எண்ணிக்கையில் திரட்டி தொடர் போராட்டத்தை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.இதற்கிடையே மேற்படி கடைக்கு வெள்ளிக்கிழமை மாலை மதுபான சரக்குகள் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு விற்பனை நடவடிக்கை தொடங்கியது.

Leave a Reply

You must be logged in to post a comment.