சென்னை,
ஹங்கேரியில், “நியூக்ளியர் கிட்ஸ்” (Nuclear Kids) என்ற பெயரில் நடக்கும் சர்வதேச இசை நிகழ்ச்சியில் பங்கேற்க, கூடங்குளத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் தேர்வாகியுள்ளனர்.

இந்த சிறப்பு இசை நிகழ்வில் பங்கேற்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 79 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடங்குளத்தில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையப் பள்ளியைச் சேர்ந்த ராஜேஷ் விஸ்வ சுதன், பவித்ரா அனுப் மற்றும் நிஷ்சிதா பன்தேகர் எனும் மூவரும் அதில் அடக்கம். ரஷ்ய அரசின் அணுமின் நிறுவனமான ரொஸாட்டம் (Rosatom) சார்பில், குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் நோக்கத்தில் – ஹங்கேரியில் நடத்தப்படும் நிகழ்வுதான் நியூக்ளியர் கிட்ஸ்! வங்க தேசம், பெலாரஸ், சீனா, குரேஷியா, எகிப்து, ஹங்கேரி, இந்தியா, கஜகிஸ்தான், துருக்கி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து, இந்த நிகழ்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, ஏற்கனவே பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிப் போட்டி ஸிக்ஸ்ஸார்டு என்ற நகரத்தில், வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. பின்னர், மாஸ்கோவிலும், மற்ற முக்கிய ரஷ்ய நகரங்களிலும் விருந்தினர்களுக்காக இந்த நிகழ்ச்சி மீண்டும் காட்சிப்படுத்தப்படும்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களும், பாடகர்களும் கலந்து கொள்ள இருக்கும் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு “தி லொமோனோஸோவ்ஸ் ஸ்க்ரால் எனப் பெயரிட்டுள்ளனர். இதன் காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது என்று ரொஸாட்டம் நிறுவன தெற்காசிய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரே ஷெவ்ல்யக்கோவ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.