கோவை,
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பது குறித்து அதிகாரிகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும். டோல்கேட் கட்டண உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால், காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், நிலைமையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியவசிய பொருட்களான பால், மருந்து உள்ளிட்டவை தடையில்லாமல் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுப்பவர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: