ஈரோடு,
லஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் எஸ்.ராமச்சந்திரன். இவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் வருட ஊதிய உயர்வு சான்று, முன் ஊதிய சான்று, பதவி உயர்வு சான்று, பணி பதிவேட்டில் கையொப்பமிடுவது போன்ற அலுவலக வேலைகளில் ஊழியர்களிடம் லஞ்சம் கோரி வருகிறார். இதனை தரமறுக்கும் பட்சத்தில் சான்றுகள் மற்றும் கோப்புகளில் கையொப்பமிடாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் நடவடிக்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பரிமளாதேவி, மாவட்ட செயலாளர் குருநாகவேந்திரர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த தர்ணா போராட்டத்தில் வருவாய் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: