மாநிலங்களவையில் அவுட்சோர்சிங் முறையில் மொழிமாற்று வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை மாநிலங்களைவை தலைவர் எம்.வெங்ய்யா நாயுடு மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இப்போது மாநிலங்களவையில் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தில் எட்டாவது அட்டவணையின்கீழ் உள்ள மொழிகளில் தமிழ் உட்பட ஒருசில மொழிகளில் மட்டும்தான் உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பேசமுடியும். இதனை நாட்டிலுள்ள 22 மொழிகளில் பேசக்கூடிய விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக மாநிலங்களவையில் மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கூறியதாவது:

“இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 120ஆவது பிரிவின்கீழ், அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதித்திட தலைவருக்கு அதிகாரம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். இதுநாள்வரை, 17 மொழிகளில் மட்டும்தான் மொழிமாற்று ஏற்பாடுகள் இருந்துவந்தது. இப்போது டோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சந்தாலி, சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசினால், மொழிமாற்று வல்லுநர்கள் மூலம் மொழிபெயர்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மாநிலங்களவையில் 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பேசலாம். உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பேசி இந்த ஏற்பாட்டினை ஊக்குவித்திட வேண்டும்.

ஆயினும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையாக அல்லது முன்னெச்சரிக்கையாக ஒரு வார்த்தை. இது ஒரு புது ஏற்பாடு என்பதாலும், இப்போது அமர்த்தப்பட்டுள்ள மொழிமாற்று வல்லுநர்கள், உறுப்பினர்கள் பேசுவதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வதில் சிறிது காலம் பிடிக்கலாம். எனவே, இதில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனவே, அவர்களுக்கு இதில் சிறந்த தேர்ச்சி கிடைக்கும்வரை, இந்த ஏற்பாட்டை உறுப்பினர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு உரிய கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. டோக்ரி, உருது மற்றும் மேற்கண்ட மொழிகளில் பேச விரும்பும் உறுப்பினர்கள் முன்னதாகவே அறிவிப்பு அளித்திட வேண்டும். ஏனெனில் இவர்கள் முழுநேர மொழிமாற்று வல்லுநர்கள் கிடையாது. சிலர் மக்களவையிலிருந்து வருவார்கள். சிலர் பகுதிநேர மொழிமாற்று வல்லுநர்கள். ஏனெனில் நாடாளுமன்றம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கூடுகிறது என்பதால், அவர்கள் பகுதிநேர மொழிமாற்று வல்லுநர்களாக அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை நிரந்தரமாக பயன்படுத்திக்கொண்டால், அதற்கான நிதிச்சுமைகளையும் நீங்கள் தெரிந்துகொள்ளமுடியும்.”  என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தற்போது நியமிக்கப்பட்டுள்ள மொழிமாற்று வல்லுநர்கள் அவுட்சோர்சிங் முறையில் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்று  2017 ஆகஸ்ட் 10 அன்று சீத்தாராம் யெச்சூரி, மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்தாவது ,

” உங்கள் அருகே நிற்கும் ஊழியர்கள். நாங்கள் எங்கள் கைகளில் உள்ள தாளைக் காண்பித்தால், எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது, வந்து, எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு, செல்வார்கள். மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு இந்த அவையில் நிறைவேற்றப்பட்டபோது, மார்ஷல்கள் எந்த அளவிற்கு உதவினார்கள் என்பதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் இங்கே அரைவட்ட மேசையின்முன் அமர்ந்திருக்கிற ஊழியர்களுக்கும் தலைவணங்குகிறேன்.  இவர்களை நாம் நிருபர்கள் என அழைக்கிறோம். உலகின் தலைசிறந்த அதிவேக சுருக்கெழுத்தாளர்கள் என்று அவர்களை நான் மதிப்பிடுகிறேன். என்னுடைய உரை அடுத்தநாள் திருத்தத்திற்காக என்னிடம் வரும்போது, அதில் நான் பேசும்போது ஏதாவது தவறு செய்திருந்தால் அந்த தவறுதான் இருக்குமேயொழிய, நிருபர்களின் தவறு என்று அநேகமாக எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் மிகவும் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் மற்றும் மாநிலங்களவை ஊழியர்கள் அனைவருக்கும்  என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சமயத்தில் உங்களிடம் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் தாரைவார்த்திடவும், அவுட்சோர்சிங் விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். அவ்வாறு நாடாளுமன்றத்தையே அவுட்சோர்சிங் விடுவதற்கு கொண்டுசென்று விடாதீர்கள். அவ்வாறு நடக்காது என்றே நம்புகிறேன். இந்த ஊழியர்கள்தான், இந்த அவை, பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானபோது, தங்கள் உயிரைப் பலி கொடுத்து, இந்தஅவையைக் காப்பாற்றியவர்கள்.  நாம் நன்கு செயல்பட அவர்கள் நமக்கு அனுமதி அளித்துள்ளார்கள். சில சமயங்களில் அதிகாலை 2 மணி வரைக்கும்கூட அவை நடந்திருக்கிறது. அவர்கள் நமக்கு உணவு அளித்திருக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப் பாதுகாத்திருக்கிறார்கள். ஊழியர்களின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று தயவுசெய்து உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில் இவர்கள்தான் இந்த அவையின் முதுகெலும்பு. கண்ணுக்குத்தெரியாத வகையில் முதுகெலும்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே என் முதல் வேண்டுகோளாகும். நமக்கு வேலை செய்த அதிகாரிகளை நாம் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது சீத்தாரம்யெச்சூரி ஏற்கனவே எச்சரித்தது போன்று தற்போது பாஜக அரசு மாநிலங்களவையிலும் அவுட்சோர்சிங் கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: