புதுச்சேரி,
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆனந்த், செயலாளர் பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி வியாழகிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர். 2010ஆம் துவங்கப்பட்ட இக்கல்லூரியில் 2013ஆம் ஆண்டுவரை மருத்துவக் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் ரூ. 17 ஆயிரமாக கல்விக் கட்டணம் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்த இக்கல்விக்கட்டணம் இந்த கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து முப்பத்து ஏழாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் ஆண்டிற்கு கல்விக்கட்டணம் வெறும் ரூ.13 ஆயிரம் தான். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15க்கும் கீழ்தான் கல்வி கட்டணமாக மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டண உயர்வு நியாயமற்றது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

செண்டாக் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,20,000 வரையில் அரசு மானியம் கொடுக்கின்ற போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டண உயர்வு என்பது நியாயமானதல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறுவதற்கு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தனி சட்டம் இயற்றப்படும் என சொன்ன வாக்குறுதி இப்போதும் வெற்று வாக்குறுதியாகவே இருக்கிறது. இது புதுச்சேரி மக்களை வஞ்சிப்பதாகும். மேலும் தனியார் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணமே மிகவும் அதிகமாகும். ஆனால் இதையும் மீறி தனியார் கல்லூரிகள் கூடுதலாக கல்வி கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

எனவே புதுச்சேரி அரசு உடனடியாக கல்வி கட்டண உயர்வை திரும்பபெறமறு பரிசீலனை செய்ய வேண்டும். வாக்குறுதியின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50விழுக்காடு இடஒதுக்கீட்டினை புதுவை அரசு உடனடியாக பெற வேண்டும். தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளையையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.