புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 4 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அனுமதி கிடைக்காததால் ஜூன் 5 ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு, இம் மாதம் 2ஆம் தேதி மீண்டும் சபைக் கூடியது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அன்றைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கிடையே, மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தது தொடர்பான வழக்கை 19- ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி சட்டப் பேரவைக்குள் நுழைய பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் முயன்றனர். ஆனால், சபைக் காவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. மறுபுறம், இந்த கூட்டத் தொடரை வியாழக்கிழமையோடு (ஜூலை 19) முடிக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் மானிய கோரிக்கை விவாதங்களை சுருக்கிக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் மதியம் 1.30 மணிக்கு முடிக்கப்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி வரை நடந்தது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குதான் முடிந்தது.

கையெழுத்துபோடாத கிரண்பேடி!
புதன்கிழமை (ஜூலை 18) மானிய கோரிக்கை விவாதத்தை முடித்து பேரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டசபைக் கூட்டம் மதியம் 1.50-க்கு முடிந்தது மீண்டும் 4.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடந்தது. இதில் பட்ஜெட்டிற்கு பேரவையின் ஒப்புதல் பெறப் பட்டது. ஆனால், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனிடையே, வியாழனன்று (ஜூலை 19) காலை 11.30 மணிக்கு காலவரையின்றி சபையை ஒத்தி வைத்துள்ளதாக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர்,“ துறைரீதியான நிதிஒதுக்க மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தோம். ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்” என்றார்.

தில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் பாஜக அல்லாத அரசுகளை பழி வாங்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக ஈடுபட்டு வருகிறது. தங்களின் கைப் பாவைகளாக ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப் பட்ட பிரதிநிதிகளை சுதந்திரமாக பணி செய்யவிடாமல் தடுப்பு சுவர் அமைத்து இடையூர் செய்து வருகிறார்கள். ஆளுநரின் தலையீடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தில்லி முதல்வருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் மூக்கறுப்பட்ட மத்திய பாஜக அரசு, புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி மூலம் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதன் உச்சக் கட்டம்தான் பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் கிரண்பேடி கையெழுத்திடவில்லை. இதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சருக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கும் இடையே பனிப்போர் உச்சத்தை அடைந்திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.