மே.பாளையம்,
வெள்ளப்பெருக்கால் படகு இல்லம் உள்ளிட்டவைகள் மூழ்கிப்போனதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ளது பரளிக்காடு. இங்குள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியின் கரையோரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கையுடன் ஒரு நாள் இணைந்திருக்க விரும்புவோர் பலரும் வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் காட்டின் நடுவே ஓடும் ஆற்றில் பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, பாரஸ்ட் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதலே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் கடந்த பத்தாம் தேதி பில்லூர் அணை முழுமையாக நிறைந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூழல் சுற்றுலாவின் படகு இல்லப்பகுதி மற்றும் இதன் சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கிப்போனது.

குறிப்பாக, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பரளிக்காடு பகுதி முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் வனத்துறையினர் சூழல் சுற்றுலாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது நீர்வடியும் என தெரியாத காரணத்தினால் மறுதேதி அறிவிக்கும் வரை பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.