திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்சட்டியில் உள்ள பிஜிஆர் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் அணு மின் நிலையம் போன்றவற்றிற்கு கொதிகலன்களை தயாரித்து தருகிறது.

இந்த நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணி செய்யும் இடத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவறை சுகாதாரமாக இல்லை தொழிற் சாலையில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை போன்ற எதையும் நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. கேண்டீனில் உணவு சரியில்லை என்று கேட்டால் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்கின்றனர். மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பணத்தை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் இதுவரை செலுத்தவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் நிர்வாகம் கொத்தடிமைகளை போல நடத்தி வருவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கும் வராமல் சட்ட விரோதமாக ஜூலை 19 அன்று  காலை திடீரென தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கவில்லை. உள்ளே சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். காவல்துறையினரின் இந்த அராஜகச் செயலை சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் வன்மையாக கண்டித்துள்ளார். அனைத்து தொழிலாளர்களையும் பணியில் அமர்த்த வேண்டும், உடனடியாக பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் கே.விஜயன், சிபிஎம் பகுதிச் செயலாளர் இ.தவமணி, பகுதிக் குழு உறுப்பினர் ஜே.கே.விஜய் உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.