“கூட்டுறவே நாட்டுயர்வு… இது கடந்த காலம், கூட்டுக் கொள்ளையே வீட்டுயர்வு.. இது கழகங்கள் காலம்” என வேதனையின் உச்சத்தில் கூறுகின்றனர் சேந்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் (ஐஐ 669) அங்கத்தினர்களாக உள்ள பல கிராம விவசாயிகள். இச்சங்கத்தில் அளவில்லா முறைகேடு நடப்பதாக கேள்விப்பட்டு சேந்தநாடு கிராமத்திற்கு நேரில் சென்று உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியடையச் செய்தன.

ஊரான் வீட்டு நெய்…
இச்சங்கத்தின் செயலாளராக உள்ள சண்முகம், காசாளர் பா.பழனி, உரக்கிடங்கு பொறுப்பாளரான பலராமன் ஆகியோர் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குமேல் இங்கேயே பணிபுரிகின்றனர். தலைவராக த.கோவிந்தராசு என்பவர் உள்ளார். இவர்கள்தான் கூட்டாக சேர்ந்து ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என கிராமத்தினர் கூறுவதைப்போல அங்கத்தினர் பணத்தை ஆட்டைய போட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுரண்டப்படும் விவசாயிகள்:
“கடன் கோரும் எங்களைப்போன்ற விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நிலப்பட்டா, சிட்டாக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கடன் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் வெற்றுத் தாளில் கையொப்பம் அல்லது கைநாட்டு பெற்றுக்கொண்டு அதில் அவர்களே நிரப்பிக் கொள்வர். எவ்வளவு தொகை எழுதுகிறார்கள் என யாருக்கும் தெரியாது.  எந்த ரசீதும் தரமாட்டார்கள். கேட்டால் உள்ளூர், பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் சாக்கு போக்கு சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆனால் 4 ஏக்கருக்கு பட்டா சிட்டா கொடுத்தால் 2 ஏக்கருக்கான கடன்தான் கொடுப்பார்கள். இதையும் உரமூட்டை, தேவையில்லாத பூச்சிமருந்து டப்பா என எங்கள் தலையில் கட்டிவிட்டு மீதி கொஞ்சம் தொகை தான் பணமாக கையில் தருவார்கள். இதையும் 2,3 தவணைகளாக மாதக்கணக்கில் இழுத்தடித்துதான் தருவார்கள்”என வேதனையுடன் தெரிவித்தனர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சி.குணசேகரன், திம்மிரெட்டிப்பாளையம் இளையபெருமாள், ஒல்லியாம்பாளையம் எம்.ராமநாதன், சங்கத்தில் துவக்ககாலv உறுப்பினராக சேர்ந்து தற்போதும் தொடரும் சேந்தநாடு எம்.வெங்கடாச்சலம், கே.வடிவேல், கணவனை இழந்த1 வருடமாக கடன் கிடைக்காத பி.ராஜகுமாரி உள்ளிட்டோர்.

அன்னம் இட்டாரை….
“இச்சங்கத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ 1 கோடி சேந்தநாடு கடன் சங்கத்திற்கு விவசாயிகளுக்கான கடன்தர வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யார், யாருக்கு எவ்வளவு தொகை கடன் தரப்பட்டுள்ளது என்ற விபரம் சம்மந்தப்பட்டுள்ள விவசாயிக்கே சொல்வதில்லை. கூடுதல் தொகை எழுதிக்கொண்டு குறைந்த தொகையை விவசாயிகளிடம் தந்துவிட்டு மீதித் தொகையை கையாடல் செய்கிறார்கள் எனத்தெரிகிறது. 700 பேருக்குமேல் கடன் தரப்பட்டதாக கூறுகின்றனர். ஒருவருக்குகூட பாஸ்புக் தருவதில்லை. கடந்த 2017ல் மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்துள்ளனர். ஆனால் மேற்கண்ட அலுவலர்களும், தலைவரும் ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் நடவடிக்கை இல்லை.  கூட்டுறவுத்துறை மேல் அதிகாரிகளையும் இவர்கள் வளைத்துப் போட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஒருவர்தான் விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உண்மை வெளிவராது. எனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகோரி அனைத்துக்கட்சியினரையும் சேர்த்து போராட்டம் நடத்த உள்ளோம்” என்றனர் சேந்தநாடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டதுணைச் செயலாளருமான அறிவுக்கரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான ஜெ.ஜெயக்குமாரும்.

‘யானைக்கு அல்வா’
ஜெயலலிதா ஆட்சியின்போது வழங்கப்பட்ட கறவை மாட்டுக்கடன் வாங்கிய லட்சுமி என்பவரிடம் ரூ 20 ஆயிரத்திற்கு கையொப்பம் பெற்றுக்கொண்டு யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட கணக்கு(!)’ என ரூ 5 ஆயிரம் பிடித்துக்கொண்டு மீதி 15 ஆயிரம்தான் கொடுத்தனர், என ஆவேசப்பட்டார் லட்சுமியின் மகன் கே.கிருஷ்ணமூர்த்தி. இக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் இதற்கான ரசீதும் தர மறுக்கின்றனராம்.

1800 பவுன் திருட்டு…
மார்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரான டி.ஏழுமலை கூறும்போது “பல ஆண்டுகளுக்கு முன்பு திருநாவலூர் உழவர் கூட்டுறவு பணி சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 1800 பவுன் நகைகள் திருடு போயின. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்திய பின்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்னும் உரியவர்களுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்படவில்லை” என்றார். திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கடன் சங்கத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. பலர் கைது செய்யப்பட்டனர். இப்படி ‘தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகாது’ என்பதைப்போல ஆளுங்கட்சிகளின் ஆட்கள் கூட்டுறவு சங்கங்க ளின் நிர்வாகிகளாக இருந்து அவற்றை நாசமாக்கியதுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. இனிமேலாவது குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தலையில்லா கொழுக்கட்டை!
நாம் விசாரித்தவரையில் விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க வந்த தொகைக்கூட பெரும்பா லோருக்கு தரப்படவில்லை என அங்கத்தினர்களான சி.பாலகிருஷ்ணன், கே.ஆறுமுகம், ஜி.கேசவன், வி.ஆறுமுகம் என பலர் கூறுகின்றனர்.  “கொழுக்கட்டைக்கு தலை இல்லை” என்பதைப்போல கேட்க ஆளில்லாதவர்களாக ஆட்டம் போடும் சேந்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் நிர்வாகிகளைப்போல எண்ணற்றோர் விவசாயிகளின் ‘கூடக் குடியிருந்து கொண்டுகொள்ளியை சொருகி’ வருகின்றனர். மலைமுழுங்கி மகாதேவன்கள் அரசாளும் நாட்டில் மக்கள் இயக்கங்கள்தான் இவர்கள் விழுங்கியதை கக்க வைக்கும் என்பதே உண்மை.

வி.சாமிநாதன்.

Leave a Reply

You must be logged in to post a comment.