சேலம்,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாலிபர் சங்கத்தினரை பாராட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் கடும் கெடுபிடி விதித்ததால் சேலத்தில் தரையில் அமர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் மீதுதாக்குதல் நடத்தியதுடன், 20 பேர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இதன்பின் நீதிமன்றத்தின் மூலம் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா சேலம் சாமிநாதபுரம் பகுதியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில், மாநகர காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.இதன்பின் பொதுக்கூட்டத்திற்கு ஒருநாள் முன்பு சில நிபந்தனைகளுடன் தெருமுனைக் கூட்டமாக நடத்த அனுமதி தருகிறோம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி மேடை அமைக்கக்கூடாது. பந்தல் மற்றும் நாற்காலிகள் போடக்கூடாது. அரசிற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது. ஒலிப்பெருக்கி ஒன்று மட்டும் வைத்து ஒருமணி நேரம் மட்டும் கூட்டத்தை நடத்த வேண்டும் என பல்வேறு கெடுபிடிகளை காவல் துறையினர் விதித்தனர்.

இதன் மூலம் பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் தடுத்துவிடலாம் என காவல்துறையினர் தரப்பில் கருதினர்.இருப்பினும், இத்தகைய நெருக்கடிகளை மீறி மேடை, பந்தல் இல்லாமல் (5 இருக்கைகள் மட்டும்) ஒரு மைக், ஸ்ப்பீக்கர் மட்டும் வைத்து அனைவரும் தரையில் அமர்ந்தபடி பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் துவக்க உரையாற்றினார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளருமான எஸ்.கே.மகேந்திரன், மாநிலதலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாதர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.ஜோதிலட்சுமி, தமுஎகச மாவட்ட தலைவர் மதுரபாரதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதன்பின், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிறை சென்று வந்த வாலிபர் சங்கத்தினர் மற்றும் அவர்களை விடுவிக்க சட்ட போராட்டம் நடத்திய அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினரான வழக்கறிஞர் வெற்றிவேல் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர். முடிவில், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ் நன்றி கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட இரு நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: