நாங்கள் 
சமையலராக இருக்கிறோம்
நாங்கள் சமைத்த உணவு
உனக்கு வேண்டாமெனில்…
நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே
வைத்தியம் செய்துகொள்
செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக்கொள்
பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக்கொள்
பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டடத்தை
நீயே கட்டிக்கொள்
வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே
வாதாடிக்கொள்
முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக்கொள்
ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக்கொடு
ஓட்டுநராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக்கொள்
கூலிகளாய் இருக்கிறோம்
உன் சுமைகளை
நீயே தூக்கிக்கொள்
மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை
நீயே அள்ளிக்கொள்
சாக்கடை வாருபவராக இருக்கிறோம்
உன் சாக்கடையை
நீயே வாரிக்கொள்
கலப்புமணம் புரிந்தவராக இருக்கிறோம்
உன்னையே நீ
புணர்ந்துகொள்
நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதியவராக இருக்கிறோம்
இதுவும் உனக்கு வேண்டாமெனில்
தயவுசெய்து
தற்கொலை செய்துகொள்.

– சுகிர்தராணி

Leave A Reply

%d bloggers like this: