புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 5-ஆம் வகுப்பு சிறுமிகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த ஆசிரியர் அன்பரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நரியன் புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளயில் உதவி ஆசிரியராக அன்பரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாகவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கத் தெரியவர, உடனடியாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பள்ளி தலைமை ஆசிரியர் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும். இனிமேல் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இதை நம்பிய பெற்றோர்கள் அதற்குமேல் பிரச்சனை செய்யாமல் விட்டுள்ளனர். ஆனாலும், அன்பரசனின் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. மீண்டும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட போது அவரை விரைவில் வேறு ஊருக்கு மாற்ற நடவடிக்கையும் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், எந்த நடவடிக்கை எடுக்காததோடு அன்பரசனின் பாலியல் தொல்லை எல்லை மீறிச் சென்றுள்ளது. இதனால், வேதனை அடைந்த மாணவிகள் பெற்றோரிடம் மீண்டும் கூறியுள்ளனர்.

இச்சம்பவம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிபிஎம், சிபிஐ(எம்-எல்) கட்சியினருக்குத் தெரிய வரவே புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. வியாழக்கிழமையன்று பள்ளியின் முன்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், சிபிஐ(எம்எல்) பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் அன்பரசனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி கூறும்போது, கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக அன்பரசன் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்ட வந்துள்ளார். பலகட்டப் போராட்டத்திற்குப் பிறகே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பணியிடை நீக்கம் மட்டும் போதாது. இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்டு அன்பரசன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆசிரியர் பணியில் இருந்தே அன்பரசன் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பள்ளித் தலைமை ஆசிரியர் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் சமாதானம் பேசியதோடு, ஆசிரியரையும் காப்பாற்றி வந்துள்ளார். எனவே, தலைமை ஆசிரியர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற காட்டுப் பகுதியில் உள்ள பள்ளியை ஊருக்குள் கொண்டுவருவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சிபிஎம், சிபிஎம்(எல்) கண்டனம்
நடந்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ(எம்எல்) கட்சிகளின் மாவட்டக்குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஆசிரியர் கைது செய்யப்படாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.