விருதுநகர்:
சாலை அமைத்தால் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என்று பாஜக தலைவர் தமிழிசை சொல்வது நகைப்புக்குரியது என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்,
இராஜபாளையத்தில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன், விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது :

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை என்பவரது நிறுவனமான எஸ்.பி.கே நிறுவனத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல நுhறு கோடி ரூபாய் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்ணா மேம்பாலம் கீழே ரூ.3 கோடி எடுக்கப்பட்டது. காரில் ரூ.29 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தோண்ட, தோண்டப் பணம் மற்றும் நகைகள், தங்க கட்டிகள் மற்றும் வைரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியும் சம்பந்தப்பட்டுள்ளார். இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

கடந்த காலங்களில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விடும் போது ஏராளமான போட்டிகள் இருக்கும். மேலும் ஒப்பந்தகாரரின் பணம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். சாலைகள் தரமில்லையெனில் அந்த பிடித்த தொகை மூலம் சாலை சரி செய்யப்படும். ஆனால், கடந்த 5வருடங்களாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சாலைகள் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஒன்னரை ஆண்டுகளில் தலைமைச் செயலாளர் வீடு மற்றும் அலுவலகம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நபரான சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சசிகலா வீடுகள், டி.டி.வி தினகரன் வீடுகளில் எல்லாம சோதனை நடைபெற்றது. அதில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு? அவை அனைத்தும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டதா? இதில் யார் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது? அல்லது யார் மீதும் குற்றப்பத்திரிக்கை அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றால் எதுவும் இல்லை.

சேகர் ரெட்டி மீண்டும் தொழில் நடத்துகிறார். தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன்ராவ் மீண்டும் அதிகாரியாகவே தொடர்கிறார். என்றால் வருமான வரித்துறை சோதனையின் பலன் என்ன?

எனவே, இதில் மத்திய நரேந்திர மோடி அரசுக்கு பங்கு உள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். மத்திய அரசின் கைப்பாவையாக வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத்துறை மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கின்றன.

எனவே, சென்னை உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய ஊழலை தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும்.

தங்கத்தில் சாலை அமைத்தால் கூட…
சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடியை மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 32 கோடியே 10 லட்சம் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. தங்கத்தில் சாலை அமைத்தால் கூட இவ்வளவு பணம் செலவாகுமா? இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ஏற்கனவே 3 சாலைகள் உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய சாலை ஏன் போடப்படுகிறது. ஏற்கனவே உள்ள இரு வழிச்சாலையை ஏன் 4 வழிச்சாலையாக மாற்றவில்லையென கேட்டால், அந்த அளவிற்கு போக்குவரத்து அதிகரிக்கவோ, நெருக்கடியோ ஏற்படவில்லையென கூறுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க ஏன் பசுமை வழிச்சாலை போடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழிசை, பொருளாதார நிபுணரா?
சாலைகள் அமைக்கப்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் எனபாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “தற்போது தமிழகத்தில் சென்னை-கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலைகள் உள்ளன. இதனால் பொருளாதாரம் உயர்ந்ததா? இல்லை. தமிழகத்தில் 49 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர் என அமைச்சரே தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்க தமிழிசை இவ்வாறு கூறுவது சரியல்ல. அவர் என்ன பொருளாதார நிபுணரா? உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளாதார நிபுணரும் அவர் பேசியதை கேட்டால் சிரிப்பார்” என தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் உடன் இருந்தார்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.