நாமக்கல்,
குமாரபாளையம் அருகே சாக்கடை கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பூலாங்காடு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள செல்வம் நகர் 2 வது வீதியிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக வெளியேற வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் தலையிட்டு இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தோர் கூறுகையில், இப்பகுதியில் உள்ள சாக்கடையினை துப்புரவு பணியாளர்கள் முறையாக தூய்மை செய்யாததால் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதுதவிர இப்பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளையும் பணியாளர்கள் முறையாக வந்து பெற்றுக்கொள்வதில்லை. ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை வரியை மட்டும் எவ்வித குறைவின்றி வசூலித்து கொள்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.