புதுதில்லி,ஜூலை 18-
சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்க வேண்டும் என்று கோரி இந்திய இளையோர் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் சிலர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அனைத்துவயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் 10 வயது முதல் 50 வயது வரை உடைய பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோருபவர்கள் தங்களது வாதங் களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முன்வைக்க வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், சபரிமலையில் வழிபாடு நடத்த பெண்களுக்கு சம உரிமையுண்டு. ஆண்களுக்கு இருப்பதைப்போன்றே பெண்களும் வழிபாடு நடத்த முடியும். இறைவழிபாடு என்பது சட்டத்தைப் பொறுத்து தீர்மானிக்கக்கூடிய ஒன்று கிடையாது. பெண்களிடம் பாகுபாடுகாட்டக் கூடாது. பெண்களுக்கு வழிபாடு செய்யும்உரிமையை மறுப்பது என்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது என்று தெரிவித்தனர். சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் சுதந்திரம்வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு என செவ்வாயன்று அம்மாநில தேவசம்போர்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெளிவு படுத்தினார். உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவை அரசு அமல்படுத்தும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது சபரிமலை தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. சபரிமலையில் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.