திருப்பூர்,

அவினாசி சத்துணவு சமையலரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய சாதி வெறியர்கள் மீது எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள குட்டகம், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த பாப்பாள் சத்துணவு சமையலராக சமீபத்தில் மாற்றலாகி வந்துள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வூரைச் சேர்ந்த சாதி வெறியர்கள், இவர் சமைத்து எங்களது குழந்தைகள்
சாப்பிடக் கூடாது என அவமானப்படுத்தி, இவரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, சமையலறையையும், பள்ளியையும் பூட்டி அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர். மாணவர்களையும் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அவிநாசி பி.டி.ஓ. ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் திருமதி பாப்பாள் அவர்களை அவர் ஏற்கனவே பணிபுரிந்து வந்த
ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். சாதிவெறியர்கள் மற்றும் அதிகாரிகளின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
12 வருடங்களுக்கு முன்னால் திருமதி பாப்பாள் சமையலராக முதன்முதலில் இப்பள்ளியில் பணியில் சேர்ந்த போதும் இவ்வூரைச் சேர்ந்த சாதிவெறியர்கள் இவரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிறகு கந்தாபாளையம் என்ற பள்ளிக்கு மாற்றிய போதும் அங்கும் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரே மாதத்தில் 3 இடங்களுக்கு சென்று கடைசியாக ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு மாறுதல் ஆகி 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது
சொந்தஊரான திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியில் சமையலர் பணியிடம் காலியாக இருப்பதை அறிந்து மாறுதல் வாங்கி பணியில் சேர்ந்த போது வேண்டுமென்றே சாதிவெறியர்கள் திட்டமிட்டு இவரை பணி செய்யவிடாமல் தீண்டாமை வன்கொடுமைச் செயலை புரிந்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக திருமதி பாப்பாளை பணி செய்யவிடாமல் தடுத்து, பள்ளியையும் பூட்டி மிரட்டிய அவ்வூரைச் சேர்ந்த சாதிவெறியர்கள்
மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், திருமதி பாப்பாள் தொடர்ந்து திருமலைக்கவுண்டமபாளையம் பள்ளியிலேயே பணிபுரிய உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.நவீனகாலத்திலும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய தீண்டாமை கொடுமை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவாகும். இந்த கொடுமையை
எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: