திருப்பூர்:
திருப்பூர் அருகே அரசுப்பள்ளியில் அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் சாதி வெறியர்கள் தடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூரை அடுத்துள்ள  திருமலைக்கவுண்டம்பாளையத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை செயல்படக்கூடிய அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமையல் பணிக்காக சமீபத்தில் பாப்பாள் (42) என்பவர் நியமிக்கப்பட்டார். முன்னதாக, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து ஒச்சாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த நிலையில், தனது ஊரிலிருந்து ஓச்சாம்பாளையம் செல்ல பயண நேரம் அதிகரிப்பதாலும், உடல்நலம் குறித்த பிரச்சனை காரணமாகவும் பணிமாறுதல் பெற்று கடந்த திங்கள்கிழமையன்று திருமலைக்கவுண்டன் பாளையத்திலுள்ள அரசு பள்ளிக்கு சமையலாளராக பணிமாறுதல் பெற்று வந்தார்.

கணவருடன் பாப்பாள்

இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த சாதிய ஆதிக்க சக்தியினர் சிலர், தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிட அனுமதிக்க முடியாது. அதனால் நாங்கள் பாப்பாளை சமைக்க விடமாட்டோம் என கூறி அவரை சமைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள சில பெண்களை அழைத்து வந்து மாணவர்களுக்கான சத்துணவை சமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாப்பாள் அந்த பள்ளியை விட்டு மாறுதல் செய்யவேண்டும் என்று சாதிய ஆதிக்க சக்தியினர் சிலர் கடந்த செவ்வாயன்று காலை பள்ளியை திறக்க விடாமல் தகராறு செய்துள்ளனர். மேலும், பாப்பாள் இந்த பள்ளியில் சமையலராக வேலை செய்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை மீண்டும் ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு (டெபிடேசன்) மாறுதல் செய்துள்ளார்.

இதுகுறித்து சமையலர் பாப்பாள் கூறுகையில்; எனக்கு சொந்த ஊரே திருமலைக் கவுண்டன்பாளையம் தான். இந்த ஊரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு பள்ளியில 12 வருஷமா வேலைபார்த்துட்டு இருக்கேன். இப்ப 2 மாசத்துக்கு முன்னாடி திருமலைக்கவுண்டம்பாளையத்துல பள்ளியிலே இருந்த சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றார். அதனால எனக்கு சொந்த ஊருலேயே டிரான்ஸ்பர் கிடச்சுது. நானும் சந்தோஷத்துல செவ்வாய்கிழமை ஆணை கடிதம் வாங்கிட்டு பள்ளிகூடத்துக்கு போயி சமையல் கூடத்துக்குள்ள போனேன். அப்ப ஊருக்காரங்க சில பேர் வந்து நீ எல்லாம் எப்படி எங்க புள்ளைகளுக்கு சமைச்சு போடலாம். உன் கை பட்ட சோத்த எங்க புள்ளைக எல்லாம் எப்படி சாப்பிடும் என திட்ட ஆரம்பிச்சாங்க, எனக்கு எதுவும் எதிர்த்து பேச முடியல. நான் கூனிகுறுகிப்போயிட்டேன்.

அதுக்கப்புறம் சாதிப்போர சொல்லி திட்டி உனக்கெல்லாம் அரசாங்க வேலை ஒரு கேடா, நீ எல்லாம் எங்கள் தோட்டத்துல வந்து எடுபிடி வேலை செய் என என திட்டி சமையல் கூடத்தை விட்டு வெளியே போக சொன்னாங்க. நானும் அமைதியா வந்துட்டேன். புதன்கிழமை இன்னும் அதிகமான ஆட்கள கூட்டீட்டு வந்து ரகளை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. டீச்சர் கிட்ட போய் இவ இங்க இருந்தா எங்க பசங்கள ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க. அதிகாரிகளும் அவங்க சொல்றத கேட்டுட்டு என்ன பழையபடி ஒச்சாம்பாளையம் ஸ்கூலுக்கே மாத்திட்டாங்க சார். நாங்களும் மனுசங்க தான சார், எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சு போடக்கூடாதா சார்” என கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்;
இதுதொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் கூறியதாவது;
சமையலர் பணிக்கு நியமிக்கபட்ட பாப்பாளை மீண்டும் பணி மாறுதல் செய்தது சரியல்ல. சாதிய ஆதிக்க சக்தியினரின் மிரட்டலுக்கு அதிகாரிகளும் அடிபணிந்து தீண்டாமை கொடுமைக்கு உடந்தையாகி உள்ளனர். ஆகவே, பாப்பாவை ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு பணிமாறுதல் செய்ததை ரத்து செய்து அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்,சி, எஸ்,டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

சாலை மறியல்;
இதற்கிடையே, இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று காலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்து தலித் அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண் குமார் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பள்ளியில் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்தியினர் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாப்பாளை திருமலைகவுண்டம் பாளையம் பள்ளியில் சமையலர் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடவும், சாதிய ஆதிக்க சக்தியினருக்கு உடந்தையாக எந்தவித முகாந்திரம் இல்லாமல் பணி மாறுதல் வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது துறைரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்;
இதற்கிடையில் திருமலைக்கவுண்டன் பாளையத்தில் பாப்பாளை சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், சட்ட விரோத பணிமாறுதல் செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் மூலம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.