கோவை,
இன்று துவங்கும் கோவை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று முதல் (ஜூலை 20) எதிர்வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை கோவை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பாரதி புத்தகாலயம் (அரங்கு எண் 108), புக்ஸ் பார் சில்ரன் (அரங்கு எண் 220) உட்பட இந்தியா முழுவதும் இருந்து 175 பதிப்பகத்தாரின் 275 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதன் முதல் நிகழ்வானது வெள்ளியன்று மாலை 5 மணியளவில் நடைபெறும். துவக்க விழாவிற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயசந்திரன் தலைமை வகிக்கிறார். கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி வரவேற்புரையாற்றுகிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் வாழ்த்துரையாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.மேலும், இந்த புத்தக திருவிழாவையொட்டி பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் இலக்கியக் கூடல் நிகழ்ச்சி, கட்டுரை, பேச்சு, குறும்படப் போட்டிகள், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புத்தகத் திருவிழா கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதோடு, புத்தகங்களுக்கு பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: