கோவை, ஜூலை 19 –
ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் கையாளல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முகாந்தரம் இருந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய சென்னையில் தணிக்கை துறையின் முக்கிய அதிகாரிகள் வியாழனன்று பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். இது மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் இயக்குநராக மருத்துவர் பானுமதி இருந்து வருகிறார். இத்துறையின் கட்டுப்பாட்டிலேயே மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் பெரியபோது என்கிற இடத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையமும் இதன் கட்டுப்பாட்டில் வால்பாறைவரை சுமார் 40 துணை சுகாதார நிலையங்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில் இந்த சுகாதரா நிலையங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் சுமார் ஒண்ணரை கோடி ரூபாய் நிதியை துறையின் இயக்குநர் பானுமதி கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து தணிக்கைத்துறை அதிகாரிகள் நான்கு பேர் பொள்ளாச்சி பெரியபோது ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறுகையில், இத்துறையின் இயக்குநர் மருத்துவர் பானுமதியின் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்து கொண்டே உள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநராக பணியில் இருந்தபோது ஊழியர்களின் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இவர் அரியலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கோவை மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்று வந்தார். இங்கு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட பணிகளுக்கான நியமனத்தில் அரசின் விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் வசூலின் அடிப்படையில் பணிநியமனத்தை தீர்மானித்தாக புகார் எழுந்தது. பானுமதியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அந்த நேரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டோம். இதேபோல சுகாதாரத்தறையில் இதுவரை எவ்வித தலையீடும் இல்லாமல் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவர் வந்தபிறகு தனக்கு வேண்டியவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக தனக்கு ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையென்று தெரிந்து போட்டியின்றி வேட்பாளர்களை வெற்றி பெறவைக்க முயற்சித்தார். ஆனால் ஊழியர்கள் ஒன்றிணைந்து தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற காரணத்தினால் தேர்தலே நடத்தாமல் பார்த்துக்கொண்டார். இப்படி தொடர்ந்து இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்தும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால் தற்போது சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டியும், ஊழலுக்கு இனைந்து போகச்சொல்லியும் காசோலையில் கையெழுத்து பெற்று பணத்தை கையாடல் செய்துள்ளார். சுமார் ஒண்ணரை கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட பெரியபோது சுகாதார நிலைய அதிகாரி அப்ரூவராக மாறி அதிகாரிகளிடம் தாம் நிர்பந்தத்தின் காரணமாக காசோலையில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்தே சென்னையில் இருந்து தணிக்கைத்துறை அதிகாரிகள் இங்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர். அரசுப்பணத்தை கையாடல் செய்தது உறுதிசெய்யப்பட்டால் சுகாதாரத்துறை இயக்குநர் பானுமதி கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் அத்துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.