ஜம்மு;
கதுவா சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில், முதன்மை குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் அசீம் சாவ்னி, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில், மெகபூபா முப்தியின் ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, தற்போது ஆளுநர் மூலமாக அம்மாநிலத்தில் அதிகாரம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டத்துறை, அரசு கூடுதல் வழக்கறிஞர், அரசு துணை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆகிய பதவிகளுக்கு 16 பேரை புதிதாக நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில்தான் அசீம் சாவ்னி பெயரையும் சேர்த்துள்ளது.ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்திலுள்ள ரஸானா வனப்பகுதியில், 8 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக பாஜக ஆதரவாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி அப்போது காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்களே ஊர்வலம் சென்றனர். காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் விடாமல் ரகளையும் செய்தனர். இதனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, கதுவா பாலியல் வன்கொலை வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றியது.

இந்நிலையில்தான், சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதன்மைக் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்ததற்காக அசீம் சாவ்னிக்கு, அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியை பரிசளித்து, மத்திய அரசு கௌரவப்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.