கோவை,
கோவை உக்கடத்தில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளால் பாதிப்புக்குள்ளாக்கும் குடியிருப்புகள் பகுதிகளை எதிர்க்கட்சியினர் ஆய்வு செய்ததுடன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிகளுக்காக கோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் உள்ள ஏழை, எளிய தலித் மக்கள் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு அரசு நிர்பந்தித்து வருகிறது. குறிப்பாக, பாலத்திற்கு சம்பந்தமே இல்லாத பகுதிகளில் வசிப்போரையும் காலி செய்யுமாறு அரசு அதிகாரிகள் நிர்பந்தித்து வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி வியாழனன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தபெதிக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், உக்கடம் பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்டஆட்சியர் ஹரிகரனை சந்தித்து மனு அளித்தனர். இதில் பொள்ளாச்சி – கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஆத்துப்பாலத்திலிருந்து ஒப்பணக்காரவீதி வரை வரும் வகையில் பாலத்தின் திட்ட வரைபடம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரைபடங்கள் மாற்றப்பட்டு கரும்புக்கடை பகுதியிலிருந்து துவங்கும் வகையில் இப்போது வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளனர். ஆகவே, இதுதொடர்பான அறிவிப்புகள் தெளிவாக அறிவிக்க வேண்டும். அந்த வரைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால் மேம்பாலத்தின் தற்போதைய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், மேம்பால பணிகளுக்காக காலி செய்யப்படும் அப்பகுதி மக்களுக்கு தற்காலிக இடத்தை அரசே வழங்க வேண்டும். மேம்பால பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடங்களுக்கு மக்கள் திரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அவர்கள் கூறுகையில், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தாமல் மேம்பாலம் கட்டவும், சம்பந்தப்பட்ட பகுதியிலேயே அம்மக்களை அமர்த்துவது குறித்து குடிசை மாற்று அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாக கூறினார். இம்முடிவை சம்பந்தப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியரே நேரில் வந்துதெரிவித்தால் அம்மக்கள் அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்தும் பரிசீ
லிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.முன்னதாக, இந்த ஆய்வு மற்றும் ஆட்சியரை சந்தித்த குழுவில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தக்குமார், காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் மயூரா ஜெயகுமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மதிமுக மாவட்ட செயலாளர் மோகன்குமார், சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் இலக்கியன், ஆதித்தமிழர் சார்பில் ரவிக்குமார், இனியவன், எஸ்.டி.பி.ஐ. சார்பில் முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் கட்சி, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: