தீக்கதிர்

அரியானாவில் பலியான ராணுவ வீரர் உடல் தருமபுரியில் அடக்கம்

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தா. அய்யம்பட்டி காவேரிபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சிவா(29).இவர் அரியானா மாநிலத்திலுள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

கடந்த 14 ஆம் தேதி, அம்பாலாகேனாட் பகுதிக்கு சென்ற ராணுவ வாகனம் பனிச்சரிவில் சிக்கியது.இதையடுத்து அந்த வாகனத்தை மீட்க கிரேன் கொண்டு செல்லப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது அருகில் நின்றிருந்த சிவா மீது கிரேனில் உள்ள இரும்பு ரோப் அறுந்துவிழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  உடனிருந்த ராணுவ வீரர்கள் அவரை மீட்டு சண்டிகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிவா குடும்பத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் புதனன்று(ஜூலை 18) அரியானாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வண்டிமூலம் தருமபுரி மாவட்டம், தா.அய்யம்பட்டி காவேரிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. ராணுவவீரர் சிவாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவாவுக்கு பூவிழி என்ற மனைவி உள்ளார். சிவாவை இழந்த அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.