சென்னை,
சென்னை, அனகாபுத்தூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். விசாரணையின்போது, சைதாப் பேட்டை, அடையாறு ஆற்றங்கரை அருகில் தனியார் கட்டுமான நிறுவனம் 11 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் அந்த தனியார் நிறுவனத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், இந்த நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப் பட்டுள்ளதா? என்று சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) பொதுப் பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கட்டுமான நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவேங்கடம், ‘அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் நிலம் பட்டா நிலம். அந்த நிறுவனத்திடம் இந்த நிலத்துக்குரிய ஆவணங்கள் எல்லாம் உள்ளன. எல்லா துறைகளிடமும் முறையான அனுமதியை பெற்ற பின்னரே, சி.எம்.டி.ஏ. கட்டிட திட்டத் துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று கூறினார். பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் உதயகுமாரும், இதேபோல வாதிட்டார். அப்போது அதிகாரிகள் சார்பில், அந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும் இடம், அந்த கட்டிடம் குறித்த புகைப்படங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகைப் படத்தை பார்த்த நீதிபதிகள், ‘அடையாறு ஆற்றங்கரைக்கு மிக அருகில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அந்த ஆற்றின் அகலம் எவ்வளவு?. மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், இதுபோன்ற அனுமதி எப்படி வழங்கப்பட்டது?’ என்று சரமாரியாக அரசு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த புகைப்படத்தை நிபுணர்கள் பார்க்க வேண்டாம். சாதாரண மனிதர்களிடம் காட்டுங்கள். அவர்கள் இதில் விதிமீறல் இல்லை என்று கூறட்டும் என்று கூறி, அந்த புகைப்படத்தை நீதிமன்றத்தில் இருந்தவர்கள் எல்லாரும் பார்க் கட்டும் என்று கூறி வழங்கினார்கள். இதன்பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:- முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள். தமிழ்நாட்டில் தான் அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளை எல்லாம் விருப்பம் போல ஆக்கிரமிக்க முடியும். பணம் இருந்தால் போதும் எதுவேண்டுமானாலும் இங்கு செய்யலாம் எனற நிலை உள்ளது. அடையாறு ஆற்றின் அகலம் என்ன? இந்த விவரம் கூட இல்லாமல், அரசு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். எங்களை பொறுத்தவரை யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இன்னொரு மவுலிவாக்கம் சம்பவம் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்த அதிகாரிகளுக்கு பாடத்தை தரவில்லையா?, ஆற்றங்கரையோரம் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குகிறீர்கள்? இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில், மண் பரிசோதனை செய்யப்பட்டதா?, அவ்வாறு பரிசோதனை செய்திருந்தால், அந்த அறிக்கையை எங்கே?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் சொல்ல வில்லை.இதையடுத்து, ‘இந்த வழக்கில் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் மற்றும் சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளையின் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் அனைத்து ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும்’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: