மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் உயிர் கொல்லி ஆலையாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அப்பகுதி மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னரும், மத்திய மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதை கைவிடவில்லை. இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற நூறு நாள் போராட்டத்தின் போதும், போராடும் மக்களை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக காவல்துறையினர் 13 பேரை துடிக்க துடிக்க சுட்டு கொன்றனர். இது தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்தது.

இந்நிலையில்  இனியும் மக்களின் எதிர்ப்பை மீறி ஆலை நிர்வாகத்தை செயல்பட அனுமதித்தால் நாமும் மாட்டிக் கொள்வோம் என்ற நிலையில் தமிழக அரசு அந் நிறுவனத்தை சீல் வைத்து மூடியிருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் வழியாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனைத்து முகாந்தரங்களையும் தமிழக அரசு அப்படியே விட்டு வைத்திருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீண்டும் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடியிருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக தன்னையும் ஒரு மனுதாரராக இணைக்க வேண்டும் என்று தலையீட்டு மனு ஒன்றை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ.அர்ச்சுணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன், மற்றும் வைகோ உள்ளிட்ட அனைத்து தலையீட்டு மனுக்களையும் ஏற்க கூடாது என்று கடுமையாக வாதிட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனுதாக்கல் செய்த  கே.எஸ்.அர்ச்சுணனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், சுப்பு முத்துராமலிங்கம், பெனோ பென்ஸிகர், சீனிசாசராகவன், வாமனன் ஆகியோர் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதையடுத்து கே.எஸ். அர்ச்சுணன் மனுவை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: