திருவண்ணாமலை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் வளர்ச்சி திட்டங்கள் யாருக்கு என்பதே கேள்வி என்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க – நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திங்களன்று (ஜூலை 16) நடைபெற்றது. அண்ணாசிலை அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் எம்.சந்திரசேகரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டக்குழு சார்பாக ரூ.10 லட்சம்  நிதியளிக்கப்பட்டது.  பின்னர் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கான முட்டை விநியோக விவகாரத் தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறப்படுகிறது. முழு விசாரணை நடத்தினால்தான் இந்த விவகாரத்தில், தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியவரும். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியாகும் அமிலம் காரணமாக, மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிலம், நிலத்தடி நீர், காற்று, கடல் யாவும் விஷமாகிறது. இதை எதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதிகளா?

போராட்டங்களை யாரும் துண்டிவிட முடியாது. மக்கள் தானாகவே போராட்டம் நடத்துகின்றனர். பெண்கள் டாஸ்மாக் கடைகளை உடைத்து போராட்டம் நடத்துகின்றனர். உண்மையில் இத்தகைய போராட்டங்கள் நடப்பதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தூண்டிவிடுபவர்கள் அல்ல. கோரிக்கைகளுக்காக, போராட்டம் நடத்தி சிறை செல்பவர்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் கடைசி தொண்டன் கூட சமூக விரோத காரியத்தில் ஈடுபட்டதில்லை. எவர் மீதும் சமூக விரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டதில்லை. காவல்துறையினர் வணங்க வேண்டிய வாழ்த்த வேண்டிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்டுப்பாடு மிகுந்த கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது. மாறாக, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் நேசமாகவும் சினேகமாகவும் காவல் துறையினரில் பலர் இருப்பதை பார்க்க முடிகிறது. சமூகவிரோதிகளின் பணய கைதிகளாக காவல்துறையினர் இருப்பதாக தெரிகிறது.

இன்னும் தேவையா? முதல்வர் நாற்காலி:
தூத்துக்குடியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடினால், காவல்துறை இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம் என் பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாநில முதல்வருக்கு தெரியாமல் எப்படி துப்பாக்கிச்சூடு நடந்தது? காவல்துறை மீது ஏன் முதல்வர் எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை. 13 அப்பாவி உயிர்கள் பலியான நிலையில், எடப் பாடிக்கு முதல்வர் நாற்காலி அவசியமா? இந்த மக்கள் விரோத போக்கை கண்டிக்காமல், போராட்டக்காரர்களை குண்டாந்தடி கொண்டு அடக்க வேண்டும் என்று கூறும் ரஜினியை, அரசியல்வாதி என்றால் உலகில் உள்ளோர் கை கொட்டி சிரிப்பார்கள்.

வளர்ச்சியின் வழி:
கெயில் திட்டம், ஸ்டெர்லைட் அலை, பசுமைச்சாலை இதெல்லாம் வளர்ச்சிக்கு வழி என்று மத்திய, மாநில அரசுகள் பொய் பேசுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. உண்மையில் தேச வளர்ச்சிக்கு உதவுபவர்கள். நெய்வேலியில் உள்ள நிலக்கரி தரமற்றது என்று அமெரிக்க நிறுனங்கள் புறந்தள்ளியபோது, கட்சியின் மூத்த தோழர் பி.ராமமூர்த்தி இந்த நிலக்கரியை ஜெர் மனிக்கும், சோவியத் ரஷ்யாவிற்கும் கொண்டு சென்று அதன் தரத்தை உறுதி செய்து, சோவியத் அரசின் உதவியோடு நெய்வேலி பழுப்பு நிலக் கரி நிறுவனம் தொடங்கப்பட்டது. இப் போது அது கம்பீரமாக நிற்கிறது. தமிழகத்தில் பசுமை சாலை அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவிக்க விவசாயிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும், அவகாச காலத்திற்கு முன்னதாகவே நூற்றுக்கணக்கான காவல்துறையினரை குவித்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இந்த திட்டத்தை எதிர்த்தால், விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டப்படுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில், பவித்திரம் என்ற மாணவன் மர்ம கொலை உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதையெல்லாம் காவல் துறை விசாரிக்காமல் விவசாயிகளை தாக்குவதில் மட்டும் முனைப்பு காட்டுவது ஏன்? பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு பதிலாக, அதே அளவு பணத்தில் அனைவருக்கும் வீடு வழங்க முடியும், நீர்நிலைகளை பாதுகாக்க முடியும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும், ஆனால், மலைகளை, மரங்களை, ஏரிகளை, கிணறுகளை அழித்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது பசுமை திட்டமா? இந்த திட்டத்தில் பணத்தில் கொள்ளையடித்து அடுத்த தேர் தலை சந்திக்கவே மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருவதாக தெரியவருகிறது.

மத்திய அரசு, மழை வெள்ள பாதிப்புகளின் போது தமிழகத்திற்கு போதிய நிவாரணம் தரவில்லை. கல்வி உதவித் தொகையை மறுத்துவிட்டது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மத்திய அரசு சொல்வதை, மாநில அரசு தவறாமல் செய்வது வேதனைக்குரியது.  மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன் கே.வாசுகி, எம்.பிரகலநாதன், பி.கண்ணன், பி.செல்வன், கே.குமரேசன், இரா.பாரி, டி.கே.வெங்கடேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.