நேற்று சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே நிறுவனம் மற்றும் அதன் குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான கணக்கில் வராத கருப்புப்பணம் பிடிபட்டுள்ளது. எஸ்.பி.கே குழுமத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் காணொளி ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

காணொளியில் கூறப்பட்ட தகவல்கள் :

மத்திய மற்றும் தமிழக அரசின் ஒப்பந்த சாலை திட்டப்பணிகளை செய்து வரும் ஸ்ரீபாலாஜி டோல் வேஸ் பி.லிட் எனப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் பழனிச்சாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி என்பது தெரியவந்துள்ளது. தற்போது வருமானவரிச் சோதனை நடத்தப்பட்ட எஸ்.பி.கே குழுமத்தின் சுப்ரமணியன் பழனிச்சாமி, செய்யாத்துரை மற்றும் நாகராஜன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். மேலும், ஏற்கனவே வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் ஆவார்.

கடந்த 2016 தேர்தலின்போது முதல்வர் தனது வேட்புமனுவில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தனது மருமகள் திவ்யா ஆண்டாள் பேப்பர் தொழிற்சாலையின் 2வது அலகில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் பங்காக வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் சுப்ரமணியன் பழனிச்சாமியும், அவளது மகள் திவ்யா பங்குதாரராக இருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியுள்ள செய்யாத்துரை மற்றும் நாகராஜன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள தனது சம்பந்தியான எஸ்.பி.கே குழுமத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் பழனிச்சாமிக்கு தற்போது நெடுஞ்சாலைத்துறையை தனது கையில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலை ஒப்பந்தங்களை அளித்து வந்துள்ளது தெளிவாகியுள்ளது.

தனது அதிகாரங்களை முறைகேடாக உபயோகித்து தனது சொந்தகாரர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்து ஊழல் செய்துவிட்டு அதில் என்ன தவறு என்று கேட்கும் முதல்வரின் செயல் லஞ்ச ஒழிப்புச்ச்சட்டத்தின்படி குற்றமானது. இதுகுறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் தொடுக்கப்பட்டள்ள வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற ஒப்பந்த ஊழல்கள் விசாரிக்கப்படுவதை தடுக்கவே ”ஜோக் ஆயுக்தா(லோக் ஆயுக்தா)” சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஒப்பந்த ஊழல்களை விசாரிக்க எந்த அதிகாரமில்லாத லோக் ஆயுக்தா சட்டத்தை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதிமுக அரசு முன்மொழிந்துள்ள சட்டத்தை திரும்ப அனுப்ப ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.