உடுமலை,
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்காத வேளாண்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை செவ்வாயன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பட்டியில் பகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்தி வந்தனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 315 வீதம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு வேளாண்மை அதிகாரிகள் வசூல் செய்து உள்ளனர். இந்நிலையில் சில விவசாயிகளுக்கு மட்டும் பெயரயளவில் காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. ஆனால், பெரும் பாலான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை அதிகாரி மகாலிங்கத்திடம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தொகை வழங்கி வரும் ஐசிஐசிஐ வங்கியின் வேளாண்மை பிரிவில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பட்டியில் உள்ள வட்டார விரிவாக்க மைய அதிகாரிகள் பயிர் காப்பீட்டுத் தொகையை வங்கியில் செலுத்தியிருந்தால், அதற்கான ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இப்பகுதியில் இது வரை எத்தனை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது என தகவல் அளிக்க வேண்டும்.மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகி வல்லகுண்டாபுரம் ஜெ. ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் விஜயகுமார், காளிமுத்து, ஆலமரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், பொன்னேரி நடராஜ், அய்யம்பாளையம் கிட்டுசாமி, குமாரபாளையம் நாச்சிமுத்து, காளிமுத்து,செளந்தர்ராஜ், கோட்டமங்கலம் சுந்தரம்,
செல்லமுத்து, சுண்டாக்கம்பாளையம் மாணிக்கம் உள்ளிட்ட திரளான விவசாயிகள்  கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.