வேலூர்,
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புகார் மனு அளிக்க குடியாத்தம் வட்டம், பரதராமி ஊராட்சி வி.டி.பாளையத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 5 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, வி.டி.பாளையம் கிராமத்தில் 175க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
பெரும்பாலும் கூலி வேலை செய்துவரும் இந்த கிராம மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, முதலில் வருபவர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படுகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் கேட்டால் அவ்வளவுதான் அரிசி வந்துள்ளது என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். இதனால், மாதந்தோறும் சுமார் 70 குடும்பங்களுக்கு அரிசி கிடைப்பதில்லை.

அரசு வழங்கும் இலவச அரிசியை நம்பி வாழ்க்கை நடத்தும் எங்களுக்கு முறையாக அரிசி விநியோகம் செய்யப்படாததால் ஒரு வேளை சாப்பிடுவதற்குக் கூட கடைகளில் அதிகவிலை கொடுத்து அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் எங்களுக்குரிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை முறையாகவழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் ராஜபெருமாள் அளித்துள்ள மனுவில், “திருப்பத்தூரிலிருந்து புதூர் நாடுவரையிலும், ஆலங்காயம் முதல் காவலூர் வரையிலும் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட இரு சாலைகளும், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் இருபுறமும் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தை 3 மீட்டர் அகலப்படுத்த வனத்துறை அனுமதி வழங்கிட வேண்டும். மேலும், பூங்குளம் முதல் ஆர்எம்எஸ் புதூர் வரை ஒரு கிலோ மீட்டர் மண் தரையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். இந்த மூன்று சாலைகளையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: