சென்னை:
சிபிஐ (எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் எஸ். குமாரசாமி கைதுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
தமிழகத்தில் கருத்துரிமை மீது தாக்குதல் தொடுக்கும் தமிழக அரசின் போக்கை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவசாயிகளின் நிலங்களை பறிக்கும், விவசாயிகளுக்கு விரோதமான திட்டமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகளோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும், ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பயன்படுத்தி நடைபெற்று வருகிற இந்தப் போராட்டங்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். குமாரசாமி உள்ளிட்டு அக்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராடும் மக்கள், அரசியல் கட்சிகள் மீதான அரசின் ஒடுக்குமுறையை ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.