கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறு துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராமமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் அனல்மின் நிலைய கம்பெனியில் மின்சாரம் தயாரிப்பதற்காக, காரைக்காலில் இருந்து ரயில் மூலம் நிலக்கரிகொண்டு வரப்பட்டு புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகே மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். காற்றின் வேகத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக நிலக்கரியிலிருந்து துகள்கள் காற்றில் பறந்து புதுக்குப்பம் கிராமம் முழுவதும் படிந்துள்ளது. மேலும் குடிநீர், துவைத்து காய வைக்கும் துணி, சாப்பிடும் உணவுகளில் கரித்துகள்கள் படிந்து விடுகிறது. சுவாசிக்கும் மக்களுக்கு மூச்சுத் தினறல் ஏற்படுவதுடன் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது.  கண்ணன் (35), பாலகிருஷ்ணன் (70), மஞ்சுளா (32) ஆகியோர் மூச்சித்தினறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நுறையீரலில் பெருமளவிற்கு கறித்துகள்கள் படிந்திரிக்கிறது எனக் கூறினார். அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அதேபோல் புதுக்குப்பம் கடற்கரையோரம் ஐஎல்எப்எஸ் தனியார் கம்பெனி கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வருவதற்காக சிறு துறைமுகம் அமைப்பதற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் முற்றும் அழிந்துவிடும். எனவே துறைமுக கட்டுமானப்பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஏற்கனவே பவர் கம்பெனிக்காக கடலில் இருந்தும், பூமியில் இருந்தும் ராட்சத குழாய்மூலம் நீரை எடுத்து மீண்டும் சுடுநிலையிலேயே கடலில் விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் மீன்வளமே இல்லை. துறைமுகமும் வந்தால் வாழ்வாதாரம் தொலைந்துவிடும் என வேதனையுடன் கூறுகின்றனர் கிராமமக்கள். நிலக்கரிகளை அகற்ற வேண்டும், துறைமுகம் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் செவ்வாயன்று (ஜூலை 17) 7ஆவது நாளாக துறை முகம் முன்பு மீனவர்களும், கிராமமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கிராமத்திற்குள் நிலக்கரி படிவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், நோய் பரவுவதால், நிலக்கரியை புதுக்குப்பம் கிராமம் அருகே கொட்டாமல், வேறு இடத்தில் கொட்ட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், புதுக்குப்பம் கடற்கரையோரம் துறைமுகம் கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நிலக்கரி படிவதை தடுப்பதற்காக, நிலக்கரி கொட்டப்படும் உயரத்தை குறைப்பதாகவும், நிலக்கரியின் மேல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றுவதை தொடர்ந்து ஊற்றுவதாகவும் கம்பெனி நிர்வாகத்தினர் தெரிவிப்பதாக வட்டாட்சியர் கூறினார். ஆனால், கிராமத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் வந்து அவர்கள் போட்டிருந்த சாமியான பந்தலை அனுமதியில்லை எனக்கூறி அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கிராமத்தின் பொது இடத்தில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், புதுக்குப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் வே.பா.தண்டபாணி, நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்தப் பகுதிமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப, தனியார் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அளித்திடுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அறிக்கை கிடைத்தவுடன் ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். கிராம மக்களோடு ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. பவர் கம்பெனிக்கு ஆதரவாக ஆட்சியர்செயல்படுகிறார் எனவும் கிராமமக்கள் குற்றம் சாட்டி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு:
இந்நிலையில் புதுக்குப்பம் கிராமத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் போராடும் மக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உங்கள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சிமுழுமையாக ஆதரிக்கிறது. கோரிக்கை நிறைவேறும் வரைஉங்களோடு இணைந்து போராடுவோம், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி, மீன்பிடிதொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் வைத்தியலிங்கம் ஆகியோரும் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். இந்த போராட்டத்தை அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் நேரில் சென்று ஆதரவு திரட்ட உள்ளோம், அதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.