தூத்துக்குடி;
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது .

தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது காவல் துறை நடத்திய தடியடி,துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜூலை 17 அன்று பாஸ்கர் மஹாலில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.முத்துகுமாரசுவாமி தலைமை வகித்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகரச் செயலாளர் டி.ராஜா, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு தலைவர் எம்.குஞ்ஞி கிருஷ்ணன், பொதுச் செயலாளர் செந்தில் குமார், துணைத் தலைவர் க.சுவாமிநாதன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர்கள் ரவி, பாலசுப்பிரமணியன், கிளை செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து மண்டல தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 39 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது,நிதி உதவி வழங்கிய தலைவர்கள் அனைவரும் மக்கள் அமர்ந்து இருந்த இருக்கைக்கு சென்று ஒவ்வொருவர்களிடம் அவர்களுக்கான நிதியுதவி வழங்கினார்கள்.

உ.வாசுகி பேச்சு
நிகழ்ச்சியில் உ.வாசுகி பேசியதாவது:
தூத்துக்குடியில் இன்றளவிலும் கிராம புறங்களில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக தூங்கவில்லை அவர்கள் தினமும் பயத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் . இதற்கு முக்கிய காரணம் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகும். இன்று வரை மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரவில்லை. இந்த கூட்டம் நடைபெறுவது கூட காவல்துறைக்கு வேப்பங்காய் போல் கசந்துள்ளது.

தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். பின்பு பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க சென்றபோது அனைவரும் பின்புற வாசல் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓடிவிட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது ஸ்டெர்லைட் ஆலை திறக்க பட வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று சொல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று பொய் சொல்லி ஆட்களை திரட்டி வந்துள்ளதாகவும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டிய மனு என்பது எங்களுக்கு தெரியாது எனவும் அது தெரிந்த காரணத்தினால் நாங்கள் திரும்பி விட்டோம் என கூறினார்கள்.

ஆனால பலர் மக்கள் விரும்பிக்கிறார்கள் என் பொய்யாக கருத்துக்களை பரப்பி வருகின்றனர் . ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரை வைத்து மூடியது போல் நாடகமாடி தற்போது மீண்டும் திறக்கும் நோக்கில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர். இந்நாடக நிகழ்ச்சிக்கு கதைவசனம் எழுதியது ஸ்டெர்லைட் கார்ப்பரேட், வடிவம் கொடுப்பது தமிழக அரசு, அதற்கு உதவி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், நடிகர்களை தேர்வு செய்வது,அவர்களுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க அழைத்து வருவது இங்குள்ள பெரும் லாரி உரிமையாளர்கள், மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகள்.
தற்போது சேலம் வழியாக செல்ல பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. அது தேசிய பசுமை வழிச் சாலை அல்ல பசுமை அழிச்சாலை என வாசுகி பேசினார்.

காவல்துறை அராஜகம்
இந்நிகழ்ச்சியையொட்டி அரங்கத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த கொடியினை பிடிங்கி எறிந்த காவல்துறையினர் இன்சூரன்ஸ் அமைப்புகளின் தலைவர்களுடன் தகராறு செய்துள்ளனர். மண்டப உரிமையாளரை மிரட்டியும் இந்நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த முற்பட்டனர். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகளும் உயர் அதிகாரிகளிடம் பேசி நிகழ்ச்சியை நடத்துவதிலிருந்து பின் வாங்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.