திருப்பூர்,
திருப்பூரில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி செவ்வாயன்று ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சி தொட்டி வலவு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், மொரட்டுப்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி நிலையம் மற்றும் அம்மா பூங்கா அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், கவுண்டம்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.57.920 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் விஜயமங்கலம் முதல் காடபாளையம், கொடியம்பாளையம் வரை சாலைக்கு புதிய தார் ரோடு அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டு வருவதையும், ரூ.11,900 ஆயிரம் மதிப்பில் தனி நபர் உரக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூ.1.230 லட்சம் மதிப்பில் மண் வரப்பு அமைக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

மேலும், நொச்சிபாளையம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53.050 லட்சம் மதிப்பீட்டில் வரப்பாளையம் முதல் காளிபாளையம் வரை சாலையினை சீரமைத்து தார் ரோடு அமைக்கும் பணியினையும், செங்கப்பள்ளி ஊராட்சி பூசாரிபாளையத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.8.080 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், செங்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.750 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் செங்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் செங்கப்பள்ளி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் என ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.177.649 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர் செல்வக்குமரன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், மனோகரன் மற்றும் பல அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: