திருப்பூர்,
ஊத்துக்குளி வட்டம் திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதைத் தடுக்க காவல், போக்குவரத்து, நெடுஞ்சாலை ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்தோரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி திங்களன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் – விஜமங்கலம் சாலையில் ஊத்துக்குளி அருகே திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் திங்களன்று குமரவேல் என்ற தனியார் பேருந்து அசுர வேகத்தில் இயக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால், இதில் பயணித்த இளைஞர் பாலத்தின் கீழ் தூக்கி வீசப்பட்டு அநியாயமாக உயிர் இழந்து விட்டார். மேற்படி பேருந்து பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி மறுபுறம் கவிழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

லாபவெறியில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்தால் ஒரு அப்பாவி இளைஞாின் உயிர் பறிபோனது மட்டுமில்லாமல் பேருந்தில் வந்த பல பயணிகளும் படுகாயமடைந்து உள்ளனர். இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இப்பாலத்தின் மீது விபத்து ஏற்பட்டு இரண்டு உயிர்கள் பலியானது. இப்படிப்பட்ட தொடர் விபத்துகள் ஏற்படுவதை ஆராய்ந்து தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அரசுத் துறைகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதன் காரணமாக விபத்துகளும், உயிர் பலியும் தொடர்கிறது.இந்த மேம்பாலம் குறுகிய திருப்பங்களை கொண்டுள்ளதால் எதிரெதிர் வரும் வாகனங்களுக்கு வளைவு தெளிவாகத் தெரியும்படி ஒளிரும் சின்னங்கள் வைக்கப்படவில்லை. அத்துடன் எவ்வித விதிமுறையையும் மதிக்காமல் ஜல்லி, கல்,  மண், மணல், காங்கிரிட் கலவை கொண்டு செல்லும் கனரக வாகனங்களில் இருந்து சிந்தும் கட்டுமான பொருட்கள் மேம்பாலத்தின் இருபுறமும் சிந்தி வாகனங்களில் செல்வோருக்கு விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மோட்டார் வாகன விதிமுறையை¨மீறி சாலைகளை நாசப்படுத்துவதுடன், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் இந்த கனரக வாகனங்களை கட்டுப்படுத்த காவல்துறையும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. சாலையில் இவ்வாகனங்களில் கொட்டிச்செல்லும் மண், மணல், ஜல்லி, கான்கிரிட் கலவைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறையினரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை.

அத்துடன் கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள பேக்காி கடைகளில் நால்ரோடு என்றும் பாராமல் அரசுப் பேருந்து உட்பட வாகனங்களை நிறுத்தி அதில் வருவோர் பேக்கரிக்குள் சென்று விடுவதாலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே, திம்மநாயக்கன்பாளையம் மேம்பாலத்தின் மீது பேருந்துகள் உட்பட வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்கவும், குறிப்பாக அதிவேகமாக செலுத்துகிற ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கட்டுமான பொருட்கள் ரோட்டில் சிதறும் வகையில் எடுத்துச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தார்பாய் போட்டு மூடி எடுத்து செல்லவும், மேம்பாலத்தின் குறுகிய திருப்பம் தெரியும் வகையில் உரிய அறிவிப்பு பலகைகளை, ஒளிப்பான்களை நிறுவவும், மேம்பாலத்தில் சிதறும் கட்டுமான பொருட்களை உடனுக்குடன் சுத்தம்செய்து அகற்றவும், கவுண்டம்பாளையம் நால்ரோட்டில் பேக்கரி கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை, காவல்துறையினர் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகாகுழு சார்பில் கே.ஏ.சிவசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.