புதுச்சேரி,
தலித் பழங்குடியினர் மக்களுக்கானத் திட்டங்களை பாரபட்சமின்றி நிறைவேற்றக் கோரி புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையில் 16விழுக்காடு நிதியை எஸ்சி, எஸ்டி மக்களுக்கு ஒதுக்க வேண்டும், திட்டநிதியை மடைமாற்றம் செய்வதை கைவிட வேண்டும், தலித் மக்களுக்கான நிதியை செலவழிக்க தலித் அமைப்புகள் உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துபோக செய்யும் உச்ச நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி தலைவர் இராச.செயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பூ.மூர்த்தி, பழங்குடியினர் கூட்ட மைப்பு தலைவர் ராம்குமார்,அருந்ததியர் மக்கள் சங்கத்தின் தலைவர் தவமணி, தலித் கூட்டமைப்பு தலைவர் அருள்தாஸ், மற்றும் நிலவழகன், சாமிநாதன், கலிவரதன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.