===பெரணமல்லூர் சேகரன்====

ஜூலை 18..
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள். 50 ஆண்டுகள் நிறைவுற்று பொன்விழாவை அனுசரித்து விழா எடுக்கும் காலமிது. இந்நாளில் தமிழ்நாடு என்ற பெயருக்காகவும் தமிழை ஆட்சிமொழியாக்கவும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கினை நினைவுகூர்தல் அவசியம்.

1952ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை அவரவர் தாய்மொழியிலேயே பேசும்படி கூறியது. அதுவரை ஆங்கிலத்திலேயே உரை நிகழ்த்தப்பட்டு வந்த சென்னை சட்டமன்றத்தில் முதன்முறையாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் பேசப்பட்டன. அதுமட்டுமல்ல. வரவு செலவு
(பட்ஜெட்) திட்டம் குறித்து மாநில மொழிகளில் பேச  இயலாது.

ஆங்கிலத்தில்தான் பேசமுடியும் என்றிருந்த நிலைமையை எதிர்க்கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி மாற்றினார். 1953ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டம் மீது உரை நிகழ்த்தி அவர் முழுக்க முழுக்க தமிழிலேயே பேசினார். அந்த உரையைக் கேட்ட அன்றைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் வரவு செலவு திட்டத்தின்மீது தமிழிலும் பேச முடியும் என ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என பாராட்டினார். கம்யூ னிஸ்ட் தலைவர் ஜீவா “நான் தமிழன். எனது மொழியே இங்கு ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், தமிழ் மொழியே நீதிமன்ற மொழியாக, போதனா மொழியாக இருக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் முதல்படி. தமிழ் தெரிந்தால் போதும், இந்த நாட்டின் ஆட்சியாளராக ஆகலாம். கல்லூரிப் பேராசிரியர் ஆகலாம் எனும் காலம் வரவேண்டும்.” எனப் பேசினார்.

1950-60ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுவது அவசியம். 1956ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விருதுநகர் தேசபக்தர் தியாகி சங்கரலிங்கனார் தான் மரணம் அடையும் முன் அதிகாரிகளிடம் கூறியது “நான் இறந்தபின் எனது உடலை கம்யூனிஸ்ட்களிடம் கொடுக்க வேண்டும் “ என்பதாகும். அதேபோல் அவர் இறந்தவுடன் அவரது உடல் மதுரை கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அவரின் இறுதி நிகழ்ச்சியைச் செய்தனர்.

இரண்டாவது நிகழ்வு..1962ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு ‘ என்று பெயரிட வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதை மாநிலங்களவையில் முன்மொழிந்தார் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. ஆனால் அந்தத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது அவர் கடலூர் சிறையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். எனவே அவர் சார்பில் கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா பி.ராமமூர்த்தி சிறையிலிருப்பதை உருக்கமாகக் குறிப்பிட்டு, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து நீண்டதொரு உரையாற்றினார்.

1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் 11 தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றதும் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை சூட்டவேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஜூலை 18 அன்று முதல்வர் அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வாழ்க என வாழ்த்துவோம் என்று கூறி ‘தமிழ்நாடு‘ என்று மூன்று முறை முழங்கினார். அவரைத்தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என்று மூன்று முறை குரல் எழுப்பினர்.இதைத் தொடர்ந்து நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1969 ஜனவரி 14 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போதைய மத்திய அரசு மாநிங்களில் இந்தியைத் திணிக்கும் வேலைகளை குயுக்தியான முறையில் செய்து வருகிறது. பொதுப்பட்டியலில் கல்வி உள்ள நிலையில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி மாநில மொழியில் பயிற்றுவிக்கத் தடையாக உள்ளது. உயர்நீதி
மன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடு மொழியாக்கப்படாமல் ஆங்கிலமே ஆதிக்கம் புரிந்து  வருகிறது. நீதிமன்றத்தில் தமது வழக்கு எவ்வாறு நடக்கிறது என்பதை ஆங்கிலமறியா பாமரர்கள் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது. மெட்ராஸ் ஹைகோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யக்கூட இசைவு தராத அவல நிலையே நீடிக்கிறது.

மாநிலத்தில் தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிப்பதில் கிஞ்சிற்றும் சிந்தனையோ அக்கறையோ இல்லாத அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. இவற்றில் எல்லாம் மாற்றம் காணாமல் ‘தமிழ்நாடு பொன்விழா’ கொண்டாட்டத்தால் பெரிய பலன்கள் வந்துவிடப் போவதில்லை.
தாய்மொழி சுவாசமொழி. தமிழில் பிள்ளைகள் பேசுவதும் உரையாடுவதுமே கவுரவம் குறைச்சலாகி ஆங்கிலத்தில் பேசுவதையே உயர்வாகக் கருதும் பிற்போக்கு எண்ணம் பாய்ச்சல் வேகத்தில் உருவாக்கப்படுகிறது. இது ஆபத்தானது. தமிழ்வழிக் கல்வி பயில்வோ
ருக்கு உயர்கல்வியிலும் வேலையிலும் முன்னுரிமை வழங்குவதோடு தமிழ்வழிக் கல்வி பயில்வோர்க்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் நடவடிக்கையை அரசும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.

Leave a Reply

You must be logged in to post a comment.