திருப்பூர்,
திருப்பூரில், மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளியில் 2 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டது. மரம் வளர்த்தால் மழை அதிகளவில் கிடைக்கும். பூமி வெப்பம் அடைதல் தவிர்க்கப்படும் என்பதால் மரக்கன்றுகளை நடுவதை பள்ளி, கல்லூரிகளில் விழாவாகவே கொண்டாடி வருகிறார்கள். மேலும், பல்வேறு தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் பொது இடங்களில் நட்டு வைத்து வருகின்றனர். இதனால் மரம் வளர்ப்பு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில், திருப்பூரில் உள்ள தனி நபர் ஒருவர் மூலம் விதைப்பந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான செம்மண், மாட்டுச்சாணம் மற்றும் 2 லட்சம் வேப்பம் மற்றும் பனை விதைகள் வழங்கப்பட்டது. இதை கடந்த ஒரு வாரமாக மாணவிகள் தயார் செய்து வந்தனர். இப்பணிகள் செவ்வாயுடன் சிறப்பாக நிறைவடைந்த நிலையில் விதைப்பந்துகள் அனைத்தும் வனத்துறை உதவியுடன் உடுமலை மற்றும் திருமூர்த்தி வனப்பகுதிகளில் தூவப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: