கோவை,
அரசின் ஒப்பந்தத்திற்கு எதிராக போராடுவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிகார தோரணையோடு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை 26 ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே ஜூலை 31 ம் தேதி அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு நிர்வாகம் இப்போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்கிற வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தை ஆர்எஸ்புரம் காவல்நிலையத்தில் செவ்வாயன்று கோவை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்தது. எதிர்க்கட்சிகளின் சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, ஜெயபால், அஜய்குமார் மற்றும் யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தேவராஜ், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் கட்சியின் ரவிக்குமார் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் லட்சுமி, உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்தத்தை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகும், அரசியல் சட்டத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கையை கைவிடுங்கள் என அதிகாரத்தோரணையோடு பேசினார். இதனால் நாங்கள் ஆவேசமடைந்து கோவை மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்தம்தான் மக்களுக்கு எதிரானது. மக்களுக்கான போராட்டத்தை நடத்துவது ஜனநாயக விரோதமாகாது. நாங்கள் திட்டமிட்டபடி எங்களது போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தோம். பின்னர், அப்படியென்றால் நீங்கள் வழக்கமாக போராட்டம் நடத்தும் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துங்கள், மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு நடத்த கூடாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிக்கிறோம்என அனைவரும் எழுந்து வந்துவிட்டோம் என்றார்.

இதனைதொடர்ந்து கோவை மாநகர திமுக அலுவலகத்தில் எதிர் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை 31ல் நடைபெறும் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது எனவும், 100 வார்டுகளிலும் தெருமுனைக்கூட்டம், துண்டு பிரசுரம்விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை தீவிர படுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமைச்சரும், மாநகராட்சி அதிகாரியும் அதீத ஆர்வம் காட்டுவதின் பின்னணியில் ஊழல் ஆதாயம் இருக்கலாம், ஆனால் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்வதற்கு காவல்துறையினர் ஏன் மெனக்கெடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் பேசியது காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.