தீக்கதிர்

சுவாமி அக்னிவேஷ் மீது சங்-பரிவாரங்கள் தாக்குதல்..!

ராஞ்சி:
ஜார்க்கண்ட்டில், சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக தொண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுவாமி அக்னிவேஷ் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநில முன்னாள் எம்எல்ஏ-வான அக்னிவேஷ், இந்துத்துவா அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். மாட்டிறைச்சி விஷயத்திலும் இந்துத்துவா கும்பலுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் பாஜக-வுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களை தூண்டிவிடுவதாக கூறி பாஜக-வினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாகுர் என்ற இடத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். பின்னர் ஒருகட்டத்தில் அக்னிவேஷ் மீது சரமாரியான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அக்னிவேஷ், கடவுளின் கருணையாலேயே தான் உயிர் பிழைத்திருப்பதாகவும், தன்னை கொலை செய்யும் நோக்கத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கேரளத்திலும் பாஜக வன்முறை
2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சில நாட்களுக்கு முன்பு பாஜக-வை விமர்சித்திருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இரண்டாண்டுகளுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் பேசிய ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொல்லாடலையே சசி தரூரும் கையாண்டிருந்தார்.ஆனால், இதற்கு நேரடி பதில் எதையும் கூறாத பாஜக-வினர், சசி தரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை மட்டும் தொடர்ந்து கூறி வந்தனர். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்ட சசி தரூர், ‘இந்துராஷ்டிரம் தங்களின் கனவல்ல’ என்று பாஜக-வினர் கூறி விட்டாலே, பிரச்சனை முடிந்து விடும்; தனது கருத்தும் பின்னால் போய்விடும் என்று தெரிவித்தார்.

எனினும் வெறியடங்காத பாஜக-வினர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் அலுவலகத்தை செவ்வாயன்று சூறையாடியுள்ளனர். அலுவலகத்தின் கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவற்றின் மீது என்ஜின் ஆயிலை ஊற்றியும், மனு கொடுக்க வந்திருந்தவர்களை அடித்து விரட்டியும் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

இதனை சசி தரூர் கண்டித்துள்ளார். ‘இந்துராஷ்டிரா கனவை விட்டு விட்டீர்களா? என்ற எனது எளிமையான கேள்விக்கு பாஜக அளித்துள்ள பதில், தாக்குதல் மற்றும் வன்முறை. இதன்மூலம் அவர்களின் அராஜக முகம் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டு இருக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார். மேலும், ‘தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை; இந்துக்களே திரண்டு தாக்கியதாக இந்த சங்கி குண்டர்கள் (Sanghi goondas) கூறுவார்கள்’ என்றும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.