மே.பாளையம்,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இரு மாவட்டங்களுக்கு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மேட்டுப்பாளையம் ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ளூர்வாகனங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களும் பயணிக்கின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் வழியில் கல்லார் என்னுமிடத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துந்ளது.

நீலகிரி மலையடிவாரப்பகுதியான கல்லாரில் வசிப்போர் பலரும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர்கள் தங்களது வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக காலை நேரத்தில் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இவை மேய்ச்சலுக்கு பின்னர் மாலை நேரத்திலேயே மீண்டும் திரும்புகின்றன. அதிகாலை நேரத்திலேயே திறந்து விடப்படும் இம்மாடுகளை மேய்க்க இதன் உரிமையாளர்கள் யாரும் உடன் வராத காரணத்தினால் இவை கட்டுப்பாடு ஏதுமின்றி சாலையிலேயே பெரும்பாலும் சுற்றித்திரிகின்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே ஊர்வலம் போல் வருவதால் வாகனங்கள் கடந்து செல்ல இயலாமல் இடையூறு ஏற்படுகின்றன. சாலையின் நடுவே நிற்கும் மாடுகள் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுவதில்லை. மாடுகளின் அருகேசென்று அதிக ஒலியில் ஹாரன்அடித்தால் கூட இவை பயப்படாமல்மிக மெதுவாகவே நகர்கின்றன. பல நேரங்களில் சாலையோரத்தில் இருந்து இவை திடீரென கூட்டமாக சாலையின் நடுவே வந்து விடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.