திருவண்ணாமலை;
கொள்ளையடித்த பணத்தை பங்குபோடவே வருமான வரிச்சோதனைகள் நடைபெறுவதாக தெரிகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.திருவண்ணாமாலையில் திங்களன்று (ஜூலை 17) செய்தியாளர்களிடம் அவர் கூறியது வருமாறு: சேலம்- சென்னை எட்டுவழிச் சாலை தேவையற்றது. ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும் போது இந்த நான்காவது சாலை வேண்டாம் என்றுதான் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 8 வழி சாலை அமைக்க விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அவகாசத்திற்கு இடம் தராமல், விவசாயிகளின் நிலங்களை காவல்துறையினர் உதவியுடன் அளவீடு செய்யப்படுகிறது. ஏற்கனவே கெயில் எரிவாயு பிரச்சினையில் ஜெயலலிதா விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.தற்போதுள்ள முதலமைச்சர் ஏன் விவசாயிகளை அழைத்து பேசவில்லை. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இடம்பெறுவதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக ஒருவார காலத்திற்கு அனைத்துப்பகுதி மக்களையும் சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்தவுள்ளோம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துகிறார்கள். ஆனால் வழக்குப்பதிவு செய்வதில்லை. சோதனை நடத்தும்போது கமிஷன் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. கைது நடவடிக்கை எடுப்பதில்லை. அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, மிரட்டி, அவர்கள் அடித்த கொள்ளையில் பங்கு கேட்கும் நிலையே உள்ளதாகத் தெரிகிறது.

வருமான வரித்துறை வழக்கு நடத்தினால் பாதி அமைச்சர்கள் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.பாட்டாளி மக்கள் கட்சி சாதிபிடிமானம் இல்லாமல், அனைவரும் பங்கேற்கும் கட்சியாக மாறும்போது தான்,அந்தக் கட்சியின் அரசியல் நிலை குறித்து தெரிய வரும். எட்டுவழி சாலைபோல தமிழகத்தில் இன்னும் 10 சாலைகள் வரவுள்ளதாக தெரியவருகிறது. அப்படி நடந்தால் தமிழகம் முழுவதும் சாலைகளாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: