===பேரா.கே.ராஜூ===                                                                                                                                                           தில்லியில் மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி சென்ற கட்டுரையில் எழுதியிருந்தோம். மரங்கள் பற்றி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம். மரங்கள் வெட்டப்படுவது தில்லியில் மட்டுமல்ல. வேறு பல மாநிலங்களிலும் அமைச்சர்களும் நகர வளர்ச்சி பற்றி திட்டமிடுபவர்களும் இதை.. இதை.. இதைத்தான் செய்கின்றனர். இந்த அணுகுமுறை ஆட்சியாளர்களின் அறியாமையை மட்டுமல்ல, ஆணவம், மரங்கள் மீதும் அவற்றின் மதிப்பு பற்றியும் அவர்கள் காட்டும் அலட்சியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. மரங்கள் அள்ளித் தரும் பொருளாதாரம், சுற்றுச் சூழல், சமூகம், உடல்நலன் மீதான தாக்கங்கள் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.1979-ம் ஆண்டில், 50 ஆண்டுகள் வாழும் ஒரு மரத்தின் பணமதிப்பு 2,00,000 டாலர்கள் என கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.எம்.தாஸ் மதிப்பிட்டார் (1979-ல் நிலவிய விகிதங்களின்படி). அது உற்பத்தி செய்யும் ஆக்சிஜன், பழங்கள், உயிரித்திரள் (biomass), வெட்டப்படும்போது கிடைக்கும் மரக்கட்டைகள் ஆகியவற்றின் மதிப்பின் அடிப்படையிலான கணக்கு இது. ஒரு மரம் வளரும்போது கூடும் ஒவ்வொரு கிராம் எடைக்கும் 2.66 கிராம் ஆக்சிஜனை அது உற்பத்தி செய்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நான்சி பெக்காம் மரங்களது உண்மையான மதிப்பு பற்றிய தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் அவை தரும் பலன்களை இவ்வாறு பட்டியலிடுகிறார் :

மரங்கள் பல்லாண்டுகளுக்கு ஆர்ப்பாட்டமின்றி நாள்தோறும் சில பணிகளை ஆற்றுகின்றன. அவை மண்ணை உறுதிப்படுத்துகின்றன; சத்துப் பொருட்களை மறுசுழற்சி செய்கின்றன; காற்றை குளிர்விக்கின்றன; காற்றின் கொந்தளிப்பை சரிபடுத்துகின்றன; மழைப் பொழிவை உருவாக்குகின்றன; நச்சுப்பொருட்களை உள்வாங்கிக் கொள்கின்றன; எரிபொருள் விலைகளைக் குறைக்கின்றன; சாக்கடை நீரைச் சுத்திகரிக்கின்றன; இடத்தின் சொத்து மதிப்பை உயர்த்துகின்றன; சுற்றுலாவை மேம்படுத்துகின்றன; ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை ஊக்கப்படுத்துகின்றன; மன அழுத்தத்தைக் குறைக்கின்றன; சுற்றியுள்ள மனிதர்களின் உடல்நலனை மேம்படுத்துகின்றன; உயிரினங்களுக்கு உணவு, மருந்து, இருப்பிடம் ஆகியவற்றைத் தருகின்றன… இந்தப் பலன்கள் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?
இதெல்லாம் தில்லியில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் கட்டுமானக் கழக அதிகாரிகளுக்கும் தெரியாதா? நன்றாகவே தெரியும்.ஆனால் அவர்களைப் பொறுத்த அளவில் நன்கு வளர்ந்த ஒரு மரம் “மாநகர ரியல் எஸ்டேட் வெளியில் இழந்த ஓரிடம்”. தில்லியில் 17,000 மரங்களை வெட்டினால் வீடுகளைக் கட்ட, குடியிருப்புகளையும் ஷாப்பிங் மால்களையும் உருவாக்கி, கரன்சியை கணிசமாக எண்ணலாமே? மாநகரம் ஏற்கெனவே மூச்சுவிடத் திணறிக் கொண்டிருப்பது பற்றி அவர்களுக்கு என்ன கவலை? அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் நடும் ஒரு செடி, மரம் எடுத்துக்கொண்ட இடத்தில் நூறில் ஒரு பங்கு இடத்தையே எடுத்துக் கொள்ளும். அவ்வளவுதான். கட்டடங்கள் எழும்பிய பிறகு செடி நடக்கூட இடம் இல்லாமல் போகலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. 

வீடுகளையும் குடியிருப்புகளையும் தில்லியின் புறநகர்ப் பகுதிகளில் எழுப்பி மரங்களைக் காப்பாற்றலாம் என அவர்களுக்கு ஏன் தோன்றவில்லை? அப்படியே தில்லியில்தான் எழுப்ப வேண்டும் என்றாலும் மரங்களை தியாகம் செய்யாமல் மாற்றுவழிகள் உண்டா என அவர்கள் யோசிக்கலாமே? இது கட்டடக் கலை நிபுணர்கள் முன் ஒரு சவாலைத் தூக்கிப் போடும் வழி. இது ஒன்றும் சாத்தியமே இல்லாத தீர்வு அல்ல. இத்தாலி, துருக்கி, பிரேசில் போன்ற நாடுகளில் மரங்களை வெட்டாமல் அவற்றைக் கட்டடங்களின் பகுதிகளாகவே மாற்றிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.சுற்றுப்புறத்தோடு இயைந்த கட்டடங்களையும் வளாகங்களையும் ஏற்கெனவே எழுப்பிய படைப்பாற்றல் மிக்க இந்திய, அந்நிய நாட்டு கட்டடக்கலை வல்லுநர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தியாவில் கட்டடக்கலையை போதிக்கும் 80 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்திய கட்டடக் கலை நிபுணர்கள் அமைப்பில் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு போட்டியை அறிவித்து தில்லிப் பிரச்சனைக்கு சிறந்ததொரு மாற்றுத் திட்டத்தைத் தருபவருக்கு மதிப்புமிக்க பரிசைத் தருவதாக அரசு அறிவித்தாலென்ன?

உதவிய கட்டுரை ; 2018 ஜூலை 8 தேதியிட்ட ஆங்கில
இந்து நாளிதழில் திரு.டி.பாலசுப்பிரமணியன் எழுதியது

Leave A Reply

%d bloggers like this: