பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்து விட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான வரைவு மசோதா மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்து வருகின்ற பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும், தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையத்திற்குமிடையே இரண்டு தெளிவான வேறுபாடுகள் எவராலும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்கின்றன. பல்கலைக்கழகம் என்பது உயர்கல்வி என மாற்றப்பட்டு, மானியம் என்ற சொற்றொடர் நீக்கப்பட்டிருப்பதே அந்த இரண்டு மாற்றங்களாகும்.

1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில், தொடர்ந்து பல்வேறு திருத்தங்களும், சேர்க்கைகளும் செய்யப்பட்ட போதிலும், 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு எவ்வித மாற்றங்களுமின்றியே அது தொடர்ந்து இருந்து வருகிறது. பல்கலைக்கழகக் கல்வியை மேம்படுத்துவது, ஒருங்கிணைப்பது; பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், தேர்வு, ஆய்வு ஆகியவற்றின் தரங்களை நிர்ணையித்து, மேம்படுத்துவது; கல்வி தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகளுக்கான நெறிமுறைகளைக் கட்டமைப்பது; கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியில் ஏற்படுகின்ற முன்னேற்றங்களைக் கண்காணிப்பது;  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்குவது; உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் மிக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்தித் தருவது; பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அளிப்பது போன்ற செயல்பாடுகள் இந்த பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இப்போது கொண்டு வரப்படுகின்ற இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால், ஏற்கனவே இருந்து வருகின்ற பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் தானாகவே வழக்கொழிந்து போய், பல்கலைக்கழக மானியக் குழுவை இந்த ஆணையம் மாற்றீடு செய்து விடும். பொதுவாக ஒரு சட்டம் என்பது பொருந்தாததாக, பயனற்றதாக அல்லது நியாயத்திற்குப் புறம்பானது என்பதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே வழக்கொழிந்ததாகக் கூறி அது அகற்றப்படும். ஆனால் ஒரு மாற்றீட்டுடன் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது என்றால், அதன் இடத்திலே அதனுடைய குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதியதொரு சட்டம் வந்துள்ளது என்றே பொருள்படும். இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா மிக வெளிப்படையாக, தெளிவாக மாறுதலுடனான வழக்கொழிப்பு என்பதாகவே உள்ளது. இவ்வாறு அந்தச் சட்டத்தை வழக்கொழியச் செய்யுமாறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், புதிய சட்டத்தின் மூலம் அதனை மாற்றீடு செய்வதற்கும் பல்கலைக்கழக மானியச் சட்டத்தில் அல்லது அந்த அமைப்பில் உள்ள எந்தக் குறைபாடுகள் தூண்டின என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வியாக இருக்கிறது.

உயர்கல்வி ஆணைய மசோதாவின் முகப்புரையில், ”ஒரே தரத்திலான கல்விக்கான தரநிர்ணயங்களை உருவாக்குவதற்கும், அதனைச் சரியான வழியில் கண்காணித்து மேம்படுத்துவதற்குமான அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது” என்றும் “உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள கல்வித் தரத்தை ஒரே மாதிரியாக உருவாக்குவதற்காக” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய உத்தேசமான நோக்கங்களை அடைவதற்கான அமைப்பாகவே இந்திய உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுவதாக இந்த வரைவு மசோதாவின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு காலமாக தனக்கு இடப்பட்டிருந்த பணிகளைச் செய்து வந்திருக்கின்ற பல்கலைக்கழக மானியக் குழுவை அங்கீகரிக்காத இந்த வரைவு மசோதா, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலும், பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தை வழக்கொழிந்து போகச் செய்வதற்கான காரணங்களையோ அல்லது வேறெந்தக் காரணங்களையோ கூறாமலும் தவிர்ப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகள் அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன. அவ்வாறான குறைபாடுகள் உண்மையில் இருக்கும்பட்சத்தில், அந்தக் குறைபாடுகளை வெளிக் கொணர்வதற்கு சட்டத் திருத்தங்கள் அவசியமாகின்றன. சட்டத் திருத்தங்கள் மூலமாக அவற்றைச் சரி செய்ய முடியாத நிலைமையில், அதுகுறித்த மௌனமே எஞ்சி நிற்கிறது.

இந்தப் புதிய சட்டத்தில், ஆணையத்திற்கென குறிப்பிட்ட நோக்கங்கள் இருப்பதாக எதுவும் குறிப்பிடப்படாதது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. “உயர்கல்வி அல்லது ஆய்வு தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருக்க வேண்டிய தரம் பற்றி தீர்மானித்து, அவற்றை ஒருங்கிணைப்பதை மத்திய அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது” என்றும், “பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு இருக்க வேண்டிய நோக்கத்தை வெளிப்படுத்துகிற வகையில், மாறி வருகின்ற உயர்கல்வியின் முன்னுரிமைகளுக்கேற்றவாறு ஏற்கனவே இருக்கின்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பினை மாற்றியமைத்து அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றும் இருமுறை மட்டுமே நோக்கம் என்கிற வார்த்தை முகப்புரையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கல்வி குறித்து உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், முதலாவதாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிற இடம் மிக முக்கியத்துவம் அற்றதாக இருக்கிறது. இரண்டாவதாக பயன்படுத்தப்பட்டிருக்கின்ற இடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒழுங்குபடுத்தும் அமைப்பைப் பற்றி பேசுகிறது. ஆனாலும் இந்த ஆணையத்தின் நோக்கங்களை வெளிப்படுத்துகின்ற போது, இந்த ஒழுங்குபடுத்துகின்ற அமைப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒழுங்குபடுத்துகின்ற அல்லது ஒழுங்குபடுத்துதல் என்ற வார்த்தைகளோ அல்லது இந்த வார்த்தைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கண்காணித்தல் என்ற வார்த்தையோ பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனாலும் அவ்வாறு குறிப்பிடப்படாததாலேயே பல்கலைக்கழக மானியக் குழு போன்றதொரு அமைப்பிடம் நடைமுறையில் ஒழுங்குபடுத்துகின்ற கட்டமைப்போ அல்லது செயல்பாடுகளோ இல்லை என்பது பொருளாகாது. கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், இணைவிப்பு, உரிமைகள் உள்ளிட்ட பலவற்றிற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி, அவற்றை தன்னிடமிருந்து நிதி உதவியைப் பெறுகின்ற நிறுவனங்களிடம் அமல்படுத்துவதற்காக மிக விளக்கமான, பரந்து அகன்ற ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ளன. விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றியதாக பத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் விளக்குகின்ற முற்றிலுமாக திருத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில், அதாவது இப்போது அளிக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவில், இத்தகைய அதிகாரங்கள் மேல்மினுக்கு  கொண்டவையாகவே காணப்படுகின்றன. வெறுமனே மாறி வருகின்ற உயர்கல்வியின் முன்னுரிமைகளுக்கேற்றவாறு மாற்றியமைப்பது தேவைப்படுகிறது என்று மட்டுமே அதில் ஆனையத்தின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக மானியக் குழு என்ற ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்பில் இருக்கின்ற எந்த குறிப்பிட்ட செயல்பாடுகளை மீளமைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது பற்றி இந்த வரைவு மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படாததற்கு அரசியல் காரணங்கள் இருக்க வேண்டும். மீளமைப்பு செய்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்ற மாறிவருகின்ற முன்னுரிமைகள் பற்றிய விளக்கங்களும் இந்த வரைவு மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான தகவல்கள் எதுவும் அளிக்கப்படாத நிலையில், புதியதொரு சட்டத்திற்கான தேவை இருக்கிறது அல்லது புதியதொரு ஆணையத்திற்கான தேவை இருக்கிறது என்ற முடிவிற்கு நாம் எவ்வாறு வர முடியும்? இந்தப் புதிய சட்ட மசோதா மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் அதன் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கின்றன என்பதை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? இந்த இரண்டு சட்டங்களைப் பற்றிய நமது மதிப்பீடானது இந்த வரைவுச் சட்டம் தருகின்ற தகவல்களைப் பொறுத்ததாகவே அமையும். ஆனால் இந்த வரைவுச் சட்டத்தில் ”பல்கலைக்கழக மானியக் குழு என்ற ஒழுங்குமுறை கட்டமைப்பை மீளமைப்பதற்கானது” என்ற தெளிவற்ற குறிப்புகளைத் தவிர, வேறெந்த தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

ஆனாலும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள வரைவு சட்டத்தின் ஒரே நோக்கம் ”ஒழுங்குமுறைப்படுத்துகிற அமைப்பு” பற்றியதாக மட்டுமே இருக்கிறது. இந்தச் சொற்றொடரும், அது சுட்டிக் காட்டுகின்ற அமைப்புகளும் இந்த வரைவு சட்டத்திற்கு முக்கியமானவையாக இருக்கின்றன. ஒழுங்குமுறைப்படுத்துகிற என்ற வார்த்தை இந்த வரைவு சட்டத்தில் நான்கு முறை கையாளப்பட்டிருக்கிறது. முதலாவதாக முகப்புரையிலும், இரண்டாவதாக ஆணையத்தின் பன்னிரண்டு உறுப்பினர்களில் இருவர் கல்வி தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்புகளின் தலைவர்கள் என்பதாக வரையறுக்கப்படுகின்ற இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களும் ஆணையத்தின் ஒழுங்குமுறைப்படுத்துகின்ற தன்மை மீது பொதுவான அக்கறை கொண்டிருந்தாலும், இங்கே வைக்கப்படுகின்ற விவாதத்துடன் தொடர்பற்றதாகவே இருக்கின்றன. மூன்றாவது மற்றும் நான்காவதாக இந்த வார்த்தை குறிப்பிடப்படும் இடங்களில், ஆனையத்தின் ஒழுங்குமுறைப்படுத்துகின்ற வேலையை வலியுறுத்துகின்ற வகையில் அவை நேரடியாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஒழுங்குமுறைப்படுத்துதல் என்ற இந்த வார்த்தை மூன்றாவது முறையாக ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில், ”தரப்படுத்தப்பட்ட தன்னாட்சியை பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான விதிகளையும், தரங்களையும் குறிப்பிடுவது, அதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பது” என்பதாகக் குறிப்பிடுகின்ற பிரிவு 4(d)இல் வருகிறது. இறுதியாக பிரிவு 4(m)இல் ”உயர்கல்வி, ஆய்வுகள் மற்றும் அவற்றோடு இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் கல்வித் தரத்தை பராமரித்துக் கொள்ளும் வகையில், தங்களைத் தாங்களே சுயமாக ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்கிற வகையில்  பல்கலைக்கழகங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலுமே ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்பாகச் செயல்படாமல், ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை நிர்ணயிக்கின்ற அமைப்பாகவே உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையமானது செயல்படும் என்று கூறப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

புதிய சட்டம் ஏற்படுத்துகின்ற எரிச்சலையும், அந்த எரிச்சல் குறித்து அது காக்கின்ற அமைதி பற்றியும் நாம் இப்போது இங்கே, ஆராயலாம். மறுவரையறைக்குள்ளாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், நமது எதிர்பார்ப்புகளுக்கு முரணாக, பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் இருந்த ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொள்வதாக இல்லாமல், அவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதாகவே இருக்கிறது. இந்த அதிகாரத்தை தன்னுடைய அதிகார எல்லைக்குள் இருக்கின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாற்றித் தருவதிலேயே உயர்கல்வி ஆணையம் தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறது.

ஆணையத்தின் செயல்பாடுகள் என்பதை விளக்குகின்ற பிரிவு 15, குறிப்பாக உட்பிரிவு (4)c  [“நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதற்கான தரநிலைகளை உருவாக்கி, அவ்வாறாக தன்னாட்சி வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு தங்கள் சொந்தப் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை, சுதந்திரம் ஆகியவற்றை வழங்குதல்”]; (4)d [”தரப்படுத்தப்பட்ட தன்னாட்சியை பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான விதிகளையும், தரங்களையும் குறிப்பிடுவது, அதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பது”]; 4(m) [”உயர்கல்வி, ஆய்வுகள் மற்றும் அவற்றோடு இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் கல்வித் தரத்தை பராமரித்துக் கொள்ளும் வகையில், தங்களைத் தாங்களே சுயமாக ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்கிற வகையில் பல்கலைக்கழகங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது”] ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பவைகளில் இருந்து ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தை ஆணையம் விட்டுக் கொடுப்பது பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

உடன்படாமை என்பது குற்றமாக்கப்படுதல்:

எவ்வாறாயினும், சில முக்கியமான ஒழுங்குமுறை அதிகாரங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன: உதாரணமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குகின்ற அதிகாரம் இந்த ஆணையத்திற்கு இருப்பதாக பிரிவுகள் 16 முதல் 20 வரை மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆணையத்தால் வழங்கப்படுகின்ற இந்த அங்கீகாரம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் செயல்பட முடியாது (பிரிவு 16(1)) என்றும், அளித்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் (பிரிவு 20) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது போன்று வழங்கப்படுகின்ற அங்கீகாரத்திற்காக தரப்படும் குறிப்பிட்ட காலம் என்பது, அதாவது இந்தச் சட்டம் வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு என்று வழங்கப்படுகின்ற காலவரையறை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தொடர் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த அங்கீகாரம் செல்லுபடியாகும் என்ற நிபந்தனையுடனே அங்கீகாரம் அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு இந்த கல்வி நிறுவனங்கள் தனது கட்டுப்பாட்டுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, அவற்றிற்கு நிதி வழங்குவதை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்த நிலையில், இப்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதா கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாக அச்சுறுத்துகிறது. இவ்வாறாக விதிகளுக்கு உடன்படாமையை குற்றமாக்கப் பார்க்கிற போக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. “ஆணையத்தால் சுமத்தப்பட்ட தண்டனைக்கு இணங்காத கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகி மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்” (பக்கம் 11) என்று பிரிவு 23(2) தெரிவிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சட்டவிரோதத் தன்மைக்குரியதாக மட்டுமே இருக்கின்ற, மோசடிக் கல்வி நிறுவனங்களைக் கையாளுவது குறித்து தொடர்புடைய பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் 22 மற்றும் 23 பிரிவுகளில் பல்கலைக்கழக மானியக் குழு வழங்குகின்ற தண்டனையுடன், ஆணையம் முன்மொழிகிற இந்த தண்டனையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், “பிரிவு 22 அல்லது பிரிவு 23களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு விதி மீறுவது ஒரு அமைப்பாக இருக்குமேயானால், அந்த அமைப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்று பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக குற்றவாளியைத் தண்டிப்பதாக இருக்கின்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைப்பாடு வெறுமனே அபராதம் மட்டுமே விதிப்பதாக, அதுவும் மோசடியான கல்வி நடைமுறைகளுக்கு எதிரானதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் மோசடி செய்த கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பது என்பதாக இருக்கும் உயர்கல்வி ஆணையத்தின் நிலைப்பாடு சட்டத்தை மீறுவதாகவே இருக்கிறது. இது போன்ற நிகழ்வில் ஆணையத்தால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்பது நிறுவனத்தின் மீது ஆணையத்தால் சுமத்தப்படும் தண்டனையை ஒத்துக் கொள்ளாமல் இருப்பதால் அதன் மீது தொடரபப்டும் நடவடிக்கையாக இருக்கிறதேயன்றி, ஆணையத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்காததற்கான தண்டனையாக இருக்கவில்லை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆனையம் வழங்குகின்ற தண்டனைகளாக “அபராதம் விதிப்பது/ பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வது / கல்வி நிறுவனத்தை மூடுவது” ஆகியவை இருக்கின்றன (ப .11).

இதில் இரண்டு கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, இந்த மூன்று தண்டனைகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அவை குடியுரிமை குறித்தவையாக இருக்கின்ற காரணத்தால், நிச்சயமாக குற்றவியல் நடவடிக்கைகளை அங்கே மேற்கொள்ள முடியாது. இந்தப் புரிதல் சரியாக இருக்குமேயானால், விதிகளை மீறுகின்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான விதிமுறைகள் இல்லாத இந்திய உயர்கல்வி ஆணையம், குற்றவாளிகள் முழுதும் நிறைந்திருக்கும் வகுப்பறையின் நடுவில் கைகள் பிணைக்கப்பட்டு, வாயடைக்கப்பட்டு நிற்கிற ஆசிரியர் ஒருவரைப் போலவே நிற்கிறது.

லாபத்தை அதிகப்படுத்த கல்வியைச் சந்தைக்கு திருப்புகின்ற போக்கு

இதை வேறுவிதமாகச் சொல்லிப் புரிந்து கொள்வது நல்லது. “உயர் கல்விக்கான ஒட்டுமொத்த சந்தை அடுத்த 10 ஆண்டுகளில் 115 பில்லியன் டாலர்  மதிப்புள்ளதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது” என்று வர்த்தக மதிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு அதிகமாக தனியார் துறை இதில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அந்த அளவிற்கான சந்தையில், ஆண்டு வருமானம் 70,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், அதன் மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிக அளவிலான லாபத்தை அடைவதற்காக இந்திய மற்றும் வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் இந்திய உயர்கல்வித் துறைக்குள் நுழைவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ​​இந்த அளவிற்கான தொகை அரசாங்கத்தின் தலையீடோ அல்லது எந்தவொரு ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தின் தலையீடோ இல்லாமல் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைக்கப்படுவதை இப்போது கற்பனை செய்து பாருங்கள். இந்தக் குழப்பங்கள் தீர்வதற்கு முன்னராக, புதிய, யதார்த்தமான, நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புள்ள சட்டங்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்னராக, உயர்கல்வித் துறைக்கு மட்டுமல்லாது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது அளப்பரிய சேதத்தை ஏற்படுத்தி விடும்.

இத்தகைய தண்டனைகள் அரசியலமைப்பின்படி உறுதிபடுத்தப்பட்டால், அது இன்னும் மோசமாகி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. குற்றவியல் வழக்கு தொடர்வதைத் தவிர உயர்கல்வி ஆணையத்திற்கு உள்ள வேறு ஒழுங்குமுறைப்படுத்துகிற அதிகாரம் என்பது தவறிழைக்கும் கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதற்கான அதிகாரம் ஆகும். இந்த இரண்டு தண்டனைகளுமே தீவிரமான தன்மை கொண்டவையாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களின் விதிமீறல்கள் மீது சமமான முறையில் தண்டனைகள் நிச்சயம் வழங்கப்படப் போவதில்லை. தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படப் போவதில்லை என்ற அதீத நம்பிக்கையுடன் உள்ள அதிகாரம் மிக்க உயர்கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற விதிமீறல்களை அதிக அளவில் செய்வதுதான் தொடர்ந்து நடக்கும். இந்த தண்டனைகளின் மூலம் விதிமீறல்கள் எதுவும் குறையப் போவதில்லை.  எந்தவொரு காரணத்திற்காகவும் உயர்கல்வி நிறுவனங்களைத் தண்டிப்பதில் ஏற்படுகின்ற வளர்ச்சியானது உயர்கல்வி ஆணையத்திற்கு ஆதரவாகவே சென்று முடியும் வாய்ப்பு இருக்கிறது. தண்டனைக்குள்ளாகப் போகின்ற தலைமை நிர்வாகி மற்றும் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பொதுவாக செல்வந்தர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும், பெரும்பாலும் உயர்சாதி ஹிந்துக்களாகவே இருப்பார்கள் என்பதால், உச்சபட்ச தண்டனைகளின்றி, ஒருவேளை எந்தத் தண்டனையும் இல்லாமலேயே, அவர்கள் தப்பிச் செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் விளைவாக ஏற்படக்கூடிய நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு, மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், “ஒதுக்கப்பட்ட” இடங்களுக்கு ஒதுக்கீட்டிற்குள் வராத “பொது வகை” மாணவர்களை ஒரு கல்வி நிறுவனம் சேர்த்துக் கொள்வதாக எடுத்துக் கொள்வோம். உயர்கல்வி ஆணையம் இந்த விஷயத்தை தன்னுடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முறையாக மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடுவதாகவும், கல்வி நிறுவனம் அதனைப் புறக்கணிப்பதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளிப்பதாகவும் கொள்வோம். அந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கொள்கைகள், அதனை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் என்று அனைத்துமே உயர்கல்வி ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விதிகளின்படி இருப்பதால், புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை உயர்கல்வி ஆணையத்திற்கு அறிவிக்கை அனுப்பும். இந்த இடத்தில் உயர்கல்வி ஆணையம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது அல்லது அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, நிர்வாக உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நிறுவனத்தில் பயிலக் கூடிய பிற மாணவர்களும் பாதிக்கப்படுவதால், அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை ஆணையம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, நிர்வாக உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அதன் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அந்த குற்றம் சார்ந்த நடவடிக்கைக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்லது நிர்வாக உறுப்பினர்கள் மாணவர் சேர்க்கையை நடத்துவது இல்லை என்பதால், பெரும்பாலும் அந்த ஆதாரங்கள் கிடைக்கப் போவதில்லை.

இதற்கு மாறாக தன்னிடம் இருக்கின்ற கடுமையான அதிகாரங்களை வேறு சில காரணங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஆணையம் தேர்வு செய்யலாம். உதாரணமாக, ஆணையம் கேட்டுக் கொண்ட ஒருவருக்கு மாணவர் சேர்க்கையில் இடம் அளிக்க மறுத்தால் இவ்வாறான அதிகாரத்தை ஆணையம் பயன்படுத்தலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், தன்னிச்சையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவ்விதத் தடையுமின்றி தவறான வழிகளில் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதாகவே இருக்கும். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போன்ற அதிகாரங்களால் உயர்கல்வியில் இடஒதுக்கீடு என்பது முடிவிற்கு கொண்டு வரப்படும்.

அருவருப்பான அதிகார இழப்பு

இந்த இரண்டு குழுக்களுமே இந்திய உயர்கல்வியில் தங்களுடைய பங்கு பற்றிய  கருத்தாக்கங்களில் முற்றிலும் மாறுபட்ட நிலை கொண்டவையாகவே இருக்கின்றன. தலையிடுவதற்கான விரிவான அதிகாரங்களுடன், நிதி வழங்குவது மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்பாக ஏற்கனவே இருக்கின்ற பல்கலைக்கழக மானியக் குழு இருந்து வருகின்ற நிலையில், இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையம் எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திற்கும் நிதி வழங்காதது மட்டுமல்ல, அந்த நிறுவனங்களை நேரடியாக ஒழுங்குபடுத்துகின்ற (அங்கீகாரத்தை வழங்குவது அல்லது திரும்பப் பெறுவதைத் தவிர). அமைப்பாகவும் இருக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், உயர்கல்வி  குறித்து ஆணையம் கொண்டிருக்கும் கருத்தியல்தான் என்ன? உயர்கல்வியில் அதனுடைய பங்கு என்ன? அதன் இருப்பிற்கான காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பு ஏன் முன்வைக்கப்படுகிறது?

அடிப்படையான கேள்விகளுக்கு இந்த வரைவு மசோதா அளிக்கின்ற மௌனமே, அதிலுள்ள மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதன் முகப்புரையில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள வரிகளைத் தவிர, இந்த வரைவு மசோதாவில் உயர்கல்வி குறித்த தனது நோக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்கென்று வேறெதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆணையத்தின் அமைப்பு பற்றி ஏறத்தாழ ஐந்து முழு பக்கங்களில் (பக்கங்கள் 2-6) அதிக கவனத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது; அங்கீகாரம் அளிப்பது மற்றும் அதனைத் திரும்பப் பெறுவது என்கிற அதன் ஒரே ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதிகாரம் பற்றி ஏறக்குறைய மூன்று பக்கங்கள் (பக்கங்கள் 8-10), மத்திய அரசிடம் தனக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அந்த தொடர்புகளின் மூலமாக கிடைக்கின்ற அதிகாரங்கள் பற்றி மூன்று பக்கங்கள் (பக்கங்கள் 12-14) இருக்கின்றன. இந்த 14 பக்க ஆவணத்தின் மீதமுள்ள மூன்று பக்கங்களில், ஒன்றாக இருக்கின்ற முதல் பக்கம் – முகப்புரை, விளக்கங்கள், மற்றும் பிற அறிமுக விவரங்களை வழங்குகின்றது. அதற்கென்று ஒதுக்கப்படுகின்ற நிதிகளின் ஒழுங்குமுறையைப் பற்றி ஒரு பக்கமும் (பக்கம் 11), இறுதியாக மீதமுள்ள இரண்டு பக்கங்கள்  (பக்கங்கள் 6-8) ஆணையத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளை விவரிப்பதாகவும் இருக்கின்றன.

கற்றலின் விளைவுகளைக் குறிப்பிடுதல், கல்வி கற்பித்தலுக்கான தரநிலைகள், தரநிலை பற்றி  சான்றளிப்பதற்கான அமைப்புகளை வடிவமைத்தல், நிறுவனத்தின் செயல்திறன்களை மதிப்பிடுதல், அரசாங்க நிதியுதவியை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆய்வுகளை ஊக்குவித்தல், அதன் தரநிலைகளை நிறைவேற்றுகிற வகையில் கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், உயர்கல்வி தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் உயர்கல்வி மீதான செயல்திறன் கொண்ட பொது உரையாடலைக் குறித்துக் கொடுப்பது (பக்கங்கள் 6-7)  என்று ஆணையத்தின் செயல்பாடுகளைச் சுருக்கிக் கூறலாம். பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் ஒரு அத்தியாய அளவிற்கான நீளத்திற்கு (அத்தியாயம் III) பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பட்டியலிடப்பட்டிருப்பதை ஒப்பிட்டு நோக்கினால், இந்திய உயர்கல்வி ஆணையத்தின் அதிகார இழப்பு எவ்வளவாக இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது.  ஆணையத்தின் பங்கானது இப்போது பரிந்துரைப்பது, சிபாரிசு செய்வது, மதிப்பீடு செய்வது, ஆலோசனை வழங்குவது என்பதாக மட்டுமே இருந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உண்மையான அதிகாரம் எதுவுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

குறைவான அரசாங்கம் –  அதிகமான ஆளுமை என்ற தன்னுடைய புதிய கண்டுபிடிப்பின் மீதான ஆர்வத்துடன் ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்பின் நோக்கத்தைக் குறைப்பதை தன்னுடைய நோக்கமாக இந்த விஷயத்தில் கொண்டிருப்பதாக அரசாங்கச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த முழக்கங்கள் குறிப்பிடுவதைப் போல, இது வெறுமனே பல்கலைக்கழக மானியக் குழுவின் சுருக்கப்பட்ட பதிப்பாக இருக்கவில்லை என்றே தெரிகிறது; இது பணமதிப்பு நீக்க அறிவிப்பிற்குச் சமமானதாக ஒரு தீவிரமான, தொலைநோக்கு மாற்றத்தை உயர்கல்வித் துறையில் கொண்டு வருகிற திட்டமாக, அது எவ்வளவு அழிவுகரமானதாக இருந்தாலும் எள்ளளவும் கவலைப்படாமல் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாக, பிரதமரின் வார்த்தைகளில் சொல்வதானால், இது இந்திய உயர்கல்வி மீது தொடுக்கப்பட்டுள்ள துல்லிய தாக்குதலாகவே இருக்கிறது.

தன்னாட்சி  குறித்து எழுகின்ற கேள்விகள்

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியச் செயல்பாடு உள்ளது. அது விரிவாகக் கவனிக்கப்பட வேண்டிய  அம்சமாகவும் உள்ளது. அதுதான் தன்னாட்சி பற்றிய பிரச்சினை.  ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வரைவுச் சட்டத்தின் பிரிவு 15 (2) பின்வருமாறு கூறுகிறது:

“சுதந்திரமாக அறிவைத் தேடுதல், புதுமை காணுதல், நினைவில் ஆழ்ந்திருத்தல், தொழில் முனையும் தன்மை கொள்ளல் மற்றும் அனைவருக்குமான அணுகல், சேர்த்துக் கொள்ளல், வாய்ப்புகளை அளித்தல் ஆகியவற்றிற்கான உதவிகளைச் செய்து கொடுத்தல், போட்டிகள் நிறைந்த  உலகச் சூழலில் உயர்கல்வி மற்றும் ஆய்வுகளின் விரிவான முழுமையான வளர்ச்சிக்காக உயர்கல்வி நிறுவனங்களின்  தன்னாட்சியை ஊக்குவித்தல் போன்ற   நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள  வேண்டும்” (பக்கம் 6).

இந்த வரைவு மசோதாவின் 15(4) பிரிவின் c), d) மற்றும் m) உட்பிரிவுகள் தன்னாட்சி என்பது எவ்வாறு ஊக்குவிக்கப்படலாம் என்பதை மேலும் விவரிக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் இதுபோன்று  “உதவுதல்”, “அணுகல்”, “சேர்த்துக்கொள்ளல்”மற்றும் “வாய்ப்புகள்” போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட வார்த்தைகளாகவோ அல்லது ஒரு வாக்கியமாகவோ கூடக் குறிப்பிடப்படவில்லை. இது போன்றவற்றை ஊக்குவிப்பதையோ அல்லது வழங்குவதையோ அந்தச் சட்டம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது அதற்குக் காரணமல்ல. அந்தச் சட்டம் முழுவதுமே அனைவருக்கும் அணுகல், சேர்த்துக்கொள்ளல் மற்றும் வாய்ப்புகளை அளித்து உதவுவதைப் பற்றியதாக இருந்ததால், அவ்வாறு தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை என்று அந்தச் சட்டம் கருதியது.

உயர்கல்வி ஆணைய சட்ட மசோதாவில், குறிப்பாக தன்னாட்சியை ஊக்குவிப்பதற்கான அதனுடைய செயல்பாடு குறித்த இந்த வார்த்தைகளின் வெளிப்பாடு போலித்தனமாக இல்லாவிட்டாலும், ஆழமான கபடத்தனத்துடன் உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது, ​​இந்த வார்த்தைகள், சொற்றொடர்கள் வெறும் முழக்கங்களாக இருக்கவில்லை. அவை முன்னேற்றத்திற்கான திட்டத்தில் வேலை செய்வதற்கான இலக்குகளாக இருந்ததால் அவற்றைத் தனித்துக் குறிப்பிடுவதற்கான தேவையில்லாமல் இருந்தது. தனியார்மயமாக்கல் – தாராளமயமாக்கல் – உலகமயமாக்கல் கொள்கைகளால் மறைந்து போயிருக்கின்ற இந்த முக்கியமான வார்த்தைகள் உண்மையில் தங்களுடைய கொள்கைகளில் இல்லாமல் இருப்பதை மறைக்கின்ற வகையில், முன்னேற்றம் என்ற பெயரால் அவற்றைக் கையகப்படுத்தி, பிறரைத் தவறாக வழி நடத்துகிற வகையிலே பயன்படுத்துவது என்பது ஒரு துயரமான முரண்பாடாகவே இருக்கிறது.

அணுகல், சேர்த்துக் கொள்ளல், அனைவருக்குமான வாய்ப்பு ஆகியவை இல்லாத இந்தக் காலகட்டத்தில் தன்னுடைய செயல்பாடுகள் குறித்து விளக்குகின்ற இடத்தில் அதனைப் பயன்படுத்தி இருக்கின்ற உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. தன்னாட்சி வழங்குவதை ஊக்குவிப்பதை தன்னுடைய நோக்கமாக கூறுகின்ற உயர்கல்வி ஆணையம் அதற்கான உண்மையான விளக்கத்தை எங்கும் குறிப்பிடவில்லை. தன்னாட்சி என்றால் என்ன என்பது குறித்த தெளிவுரையும் இந்த வரைவு மசோதாவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்தியே தன்னாட்சி என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஒரே முயற்சியாக இருக்கிறது. ஆனால் அதுவும்கூட “சுதந்திரமாக அறிவைத் தேடுவது” போன்ற பொத்தாம்பொதுவான வெற்றுரைகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. உண்மையில், இந்த ஆவணமானது முக்கியமான ஆதாரங்கள் அல்லது வாதங்களை விடவும், கேலிச் சொற்களையும், கற்பனையையும் மட்டுமே நம்பியிருக்கிறது என்று கூறுவதில் தவறேதுமில்லை.

தன்னாட்சி என்ற குறிக்கோள் பற்றியோ அலல்து அதனை வழங்குவது பற்றியோ பல்கலைக்கழக மானியச் சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என்பது உண்மைதான். பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டமைப்பு, செயல்பாடுகள், நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் போன்றவற்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பல பிரச்சினைகளைப் போலவே – தன்னாட்சி பற்றியும் கூட பொது விவாதங்கள் மூலமாக உரையாடப்பட்டிருக்க வேண்டும். அந்த உரையாடல்களின் முடிவில், தேவைப்பட்டால், தற்போது இருக்கின்ற சட்டத்திலேயே பொருத்தமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும், ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவின் நோக்கம் அதுவாக இருக்கவில்லை என்பதால், பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டம் தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை என்ற எண்ணத்திலேயே இருந்து வந்திருக்கிறது. எனவே, தன்னாட்சிக்கு ஆதரவளிக்காத பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தை இப்படியொரு சட்டத்தின் மூலமாக இல்லாமல் செய்து, இந்த மர்மமான தன்னாட்சி என்பதை ஒரு கொள்கையாகக் கொண்டு வருவதற்கான தேவை எழுந்திருக்கிறது.

கல்வி நிறுவனங்களுக்கான கல்வி தொடர்பான தன்னாட்சி என்பது இந்த உயர்கல்வி ஆணைய சட்ட வரைவைப் பொறுத்த வரை புதிதானது அல்ல; சுதந்திர இந்தியாவின் உயர்கல்வி குறித்த முதல் அறிக்கையாக இருக்கின்ற 1962ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கையிலேயே கல்வி நிறுவனங்களுக்கு அவ்விதமான தன்னாட்சி அளிக்கப்படுவது மிகவும் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. “பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அளிக்கப்படும் தன்னாட்சி விரும்பப்படுவதாக இருக்கும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக நிதி உதவி, பொது ஒழுக்கம் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனில், நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் உள்ளூர் முயற்சிகள் ஆகியவை மதிக்கப்பட வேண்டும்” என்றே ராதாகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது ஒருபோதும் நிதி தன்னாட்சியுடன் இணைக்கப்படவில்லை.

உயர்கல்வி ஆணையத்தின் முக்கியமான செயல்பாடுகள் தன்னாட்சியை ஊக்குவிப்பது என்றிருக்கின்ற அதே வேளையில், அந்தச் சட்டத்தின் மூலமாகவே உயர்கல்விக்கான நிதி வழங்குவதில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதாகவும் இருக்கிறது. இந்தப் புள்ளிகளை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். இந்த வரைவு மசோதா உண்மையில் நிதி வழங்குவதிலிருந்து ஆணையம் விலகுவதாக அறிவிக்கவில்லை; உண்மையில், ஒரு இடத்தில் (பிரிவு 15(3)(d)) ‘உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுகளை ஊக்குவிப்பதோடு, ஆய்வுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடைச் செய்வதற்காக அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவது’ என்று குறிப்பிடுகிறது. அதைத் தவிர, அந்த மசோதா நிதி வழங்குவது பற்றி முழுமையாக மௌனம் காப்பதாகவே இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தைப் போல், நிதி வழங்குவது குறித்து எந்தவிதமான விதியும் இந்த மசோதாவில் இல்லை. இது நாம் முதன்முதலாக எழுப்பிய பிரச்சினை ஒன்றில், அதாவது முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவின் தலைப்பில் இருந்து “மானியங்கள்” என்ற வார்த்தை கைவிடப்பட்டுள்ளது என்பதில் வந்து நிற்கிறது..

ஏன் ‘மானியங்கள்’ கைவிடப்பட்டது? உயர்கல்வி ஆணையத்திற்கு யார் நிதியளிப்பார்கள்?

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் உயர்கல்விச் செயலாளராக உள்ள ஆர்.சுப்ரமணியம் 2018 ஜூலை 4 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது, “நிதி வழங்குவது மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துவது ஆகிய இரண்டையும் ஒரே அமைப்பு செய்யும் போது, ​​அது மோதலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. அவ்வாறு இருப்பதால், ஒழுங்குமுறைப்படுத்துவதில் இருந்து உங்களுடைய கவனம் சிதறடிக்கப்படுகிறது. ஏனெனில் மானியங்களை நீங்கள் வழங்கும்போது, ​​அதனுடைய பயன்பாட்டையும் நீங்கள்  கண்காணிக்க வேண்டும், பயன்படுத்தப்படாத நிதியை மீட்டெடுக்க வேண்டும், நிதியைத் தவறாகப் பயன்படுத்துகின்ற போது அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்… இவ்வாறு பலவகைகளில் செயல்பட வேண்டியிருப்பதால் கல்விசார் விஷயங்களைக் கவனிக்க சிறிது நேரமே கிடைக்கிறது” என்று கூறியிருந்தார்.

உயர்கல்வி நிறுவனங்கள் இனிமேல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதி பெற வேண்டுமென்பது கற்பித்தல் மற்றும் ஆய்வுகள் மீது அரசியல் மற்றும் கருத்தியல் கட்டுப்பாட்டை உருவாக்கி விடும் என்ற அச்சம் அண்மையில் இந்தத் திட்டம் குறித்து நடைபெற்று வரும் பொது விவாதங்களில் வெளிப்படுத்தப்படுகின்ற பேரச்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியம், “மானியம் வழங்குகின்ற பொறுப்பு அமைச்சகத்தால் எடுத்துக் கொள்ளப்படப் போகிறதா அல்லது இல்லையா என்பது இங்கே பெரிதல்ல. அந்த வேலையை அமைச்சகம் செய்யலாம் அல்லது மற்றொரு நிறுவனத்திற்கு அதை ஒதுக்கி விடலாம். ஆனால் ஒரு விஷயம். நிதிச் செயல்பாடுகளை மனித குறுக்கீடுகள் இல்லாமல், ஆன்லைன் செயல்முறை மூலமாக வெளிப்படையான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனவே அமைச்சகம் தன்வசம் பொறுப்பை எடுத்துக் கொள்வதன் விளைவாக உயர்கல்வியானது அரசியல்மயமாக்கப்படும் என்ற அச்சம் சற்றும் தேவையற்றது”

உயர்கல்விச் செயலாளருக்கே எதிர்காலத்தில் இந்திய உயர்கல்விக்கான நிதி வழங்குதல் பற்றிய திட்டங்கள் தெரிந்திராத பட்சத்தில், வெளிப்படைத் தன்மை குறித்த அவருடைய எதிர்பார்ப்புகள் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. ஆனால் நிதி வழங்குவதை அமைச்சகம் தன்வசம் எடுத்துக் கொள்ளப் போவதான திட்டம் இல்லை என்பதை அவர் குறிப்பிடுவதற்குப் பின்னால், அத்தகைய மாற்றம் தற்போதைய திட்டங்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த கல்வித் துறையைத் தனியாரிடம் அளித்து விடக் கூடியதாக இருக்கலாம் என்று அவர் கருதுவதற்கான காரணமும் இருக்கிறது.

ஆசிரியர்களை அந்தரத்தில் நிறுத்துகின்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்;

கல்வி என்பதை பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்பதாக ஆக்குகின்ற முயற்சியின் உறுதியான முதல் நடவடிக்கையாக இந்த வரைவு மசோதா இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.  பணம் செலுத்த முடிந்தவர்கள் அதனைப் பெற்றுக் கொள்லலாம். பணத்திற்கான உதவியை எந்த வழியிலாவது அடைய முடிந்தவர்கள் கிடைக்கும் உதவிக்கேற்றவாறு கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம். எஞ்சியிருப்பவர்கள் கல்வியறிவு இல்லாமல் அறியாமை இருளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும். கல்வியறிவு பெற்ற மக்கள் உருவாவதை ஒருவரும் விரும்புவதில்லை என்றாலும், எழுத்தறிவு மிக்க மக்களை உருவாக்குவது அனைவரின் திட்டமாக இருக்கின்ற காரணத்தினால், எழுத்தறிவைப் புகட்டுவதற்கான திட்டங்கள் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தொடரும். சந்தையின் தேவைக்கேற்பவே கல்விக்கான விலை தீர்மானிக்கப்படும் என்பதால், அவ்வாறாக இருக்கின்ற படிப்புகள், ஆய்வுகளின் மீதான பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான மிக முக்கியமான பிரச்சனை ஒன்று இருக்கிறது.

ஆசிரியர்களின் பணி நிலைமைகள், ஊதியம், பிற பலன்கள் குறித்து இந்த வரைவு மசோதாவில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இது குறித்த மௌனம் என்பது ஆசிரியர் சமூகத்தின் மீது அரசாங்கம் ஆர்வம் அல்லது அக்கறை இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடாகவே இருப்பது கவலை தருவதாக இருக்கிறது. இந்த வரைவு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிதி ஏற்பாடுகள் சரி செய்யப்படவில்லை என்றால், அது சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு அந்தச் சுமையை யார் தாங்குவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு, “பல்கலைக்கழக மானியக்குழுவின் அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகள் [புதிய] ஆணையத்தின்  உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்பதாக மாற்றப்படும்” என்று இப்போது முன்மொழியப்பட்டுள்ள வரைவு  மசோதாவின்  கூறு 31 இல் பிரிவு (7) (d)இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஏற்கனவே இருந்த அதே நிலைமையில் இருக்கும் என்பதாகக் கருதுவதால், பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து நிதியுதவி பெறுகின்ற அனைத்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஊழியர்களின் ஊதியத்திற்கான பொறுப்பையும் உள்ளடக்கியதாக சட்டம் இருப்பதாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு நடக்கவில்லை என்றால் என்னவாகும்? ஏற்கனவே இந்த வரைவு மசோதாவின் விதிமுறைகளைப் பற்றி அறிந்துள்ள சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகங்கள், சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உடனடியாக தன்னாட்சி பெறுவதை நோக்கி நகர்ந்து, தனக்குத் தொல்லை தருவதாக அல்லது தடை ஏற்படுத்துவதாகக் கருதுகிற ஊழியர்கள் மீது ரத்தக்களரியைத் தொடங்கினால் என்னவாகும்?

இந்தக் கட்டுரையாளர் பணி புரிகின்ற தில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஹிந்துக் கல்லூரி அது போன்ற வாய்ப்புக்கள் மிகுந்த கல்வி நிறுவனமாகும். பிரதமரின் அலுவலகத்திற்கு குறைந்து யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளாததாக இருக்கின்ற அக்கல்லூரி நிர்வாகம், “கல்லூரி” என்ற நிலையில் இருந்து “நிகர்நிலைப் பல்கலைக்கழகம்” என்ற நிலைக்கு மாறுவதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை பிரதமர் அலுவலகத்தின் நிறைவேற்று ஆணை மூலமாக தங்களுடைய கல்லூரிக்கு வழங்குமாறு ஹிந்து கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய முன்மொழிவு, ஹிந்து கல்லூரி ஊழியர்கள் சங்கம் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 2016 நாளிட்ட 12 பக்க ஆவணமாகப் பெறப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக ஹிந்து கல்லூரி இருப்பதால், தில்லி பல்கலைக்கழகச் சட்டம் திருத்தப்பட்டு கல்லூரியின் இணைவிப்பு துண்டிக்கப்பட்டால் ஒழிய, அந்தக் கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது சட்டப்பூர்வமாக சாத்தியமான காரியமல்ல.

இருப்பினும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவின் 26ஆம் பிரிவில் “26. சட்டத்திற்கான மேலதிகாரம்: இந்த சட்டத்தைத் தவிர தற்போது நடைமுறையில் இருக்கும் வேறெந்த சட்டத்திலும் அல்லது இந்தச் சட்டம் தவிர வேறெந்த சட்டத்தாலும் அனுமதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆவணத்திலும் இந்த சட்டத்தின் விதிமுறைகளைக்கு அப்பாற்பட்டு கூறப்பட்டுள்ளதற்கு மேலதிகாரம் கொண்டதாக இந்தச் சட்டத்தில் உள்ள விதிகள் இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்தச் சட்டம் அதனை உடனடியாக நிகழக் கூடிய சாத்தியமுள்ளதாக மாற்றி விடும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தில்லி பல்கலைக்கழகச் சட்டத்தின் விதிகள் இனிமேல் நடைமுறைப்படுத்த இயலாமல் போய் விடும் என்பதால், கல்லூரி விண்ணப்பித்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து உடனடியாக அதற்குக் கிடைத்து விடும். கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அனுப்பியிருந்த முன்மொழிவில், ஊழியர்களிடையே நிலவுகின்ற ஒழுங்கீனமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கேட்பதற்கான ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து கல்லூரியின் இணைவிப்பு நீக்கப்பட்டால், கல்லூரியின் ஊழியர்கள் இனி தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்க முடியாது என்பதால் சங்கத்தின் பாதுகாப்பைக் கோர முடியாது என்பது எங்களுக்குத் துயரம் ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஹிந்து கல்லூரி தனது ஊழியர்களை அழிப்பதற்கான வழியை வகுக்குமேயானால், நாடு முழுவதும் இருக்கின்ற மொத்த ஆசிரியர் சமூகமும் அதே போன்றதொரு நிலையை எதிர்கொள்வதற்கான காலம் அதிகம் தேவைப்படாது.

ஒரு சிறிய ஒப்பீட்டுடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழு என்பது சட்டப்பூர்வமான அமைப்பாக இருக்கிறது. அதன் நோக்கங்கள் உண்மையில் எந்தவொரு கட்சி அதிகாரத்தில் இருப்பினும், அரசின் கொள்கைகள் மற்றும் வளங்கள் ஆகியவை கட்டமைக்கப்பட்ட, முறையான, நிறுவனமயமாக்கல் முறையில் மக்களிடம் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாகவும், அரசியல் உயரடுக்கினரின் பொருந்தாக் கருத்துகள், எண்ணக் கோளாறுகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுமாகவே இருக்கின்றன.. பொது விநியோக அமைப்பு கூட அத்தகைய அமைப்பாகவே இருந்தது.

  • பிரேம் குமார் விஜயன், உதவிப் பேராசிரியர்,

ஹிந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் )

நன்றி : http://theleaflet.in/to-enslave-a-nation-just-sell-its-minds-why-the-heci-bill-is-a-surgical-strike-to-privatise-higher-education-in-india/


தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு -விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.