கோவை,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன்சஞ்சய் பிரசாத் (18) கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு உற்பத்தி துறை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த (ஜூலை 11) புதனன்று வகுப்பில் சஞ்சய் பிரசாத்திற்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட கணினித்துறை பகுதி நேர ஆசிரியர் முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், இருவரையும் திட்டியதோடு, பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதி அளிக்கப்படுமென கூறியுள்ளார். பெற்றோரை அழைத்து வர பயந்த சஞ்சய் பிரசாத்தினை கடந்த வாரம் முழுவதும் வகுப்பிற்குள் ஆசிரியர் முருகன் விடவில்லை. இந்நிலையில் மனவுழைச்சலில் இருந்த சஞ்சய் பிரசாத்திங்களன்று திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா, சிங்கை பகுதி செயலாளர் நித்தியா மற்றும் மனோஜ் ஆகியோர் தலைமையில் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா மற்றும் மனோஜ் ஆகியோர் மீது கல்லூரி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்து வெளியேற்ற முயற்சித்தது. இதனை மாணவர்கள் அனுமதிக்காமல் கல்லூரி வாயிற்கதவை அடைத்தும், காவல் துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து வேறுவழியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க தலைவர்கள் மற்றும் மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் வைரம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். மேலும், மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு ஷிப்டு நடைபெறும் கல்லூரியின் நேரத்தை மாற்ற வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மாணவர் சங்கம் முன்வைத்தது. இதனை பரிசீலிப்பதாக நிர்வாகத்தரப்பில் உறுதியளித்தனர்.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து முதல்வர் வைரம் உத்தரவிட்டார். மாணவர் சஞ்சய் பிரசாத் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம் எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் எனவும் கல்லூரி முதல்வர் வைரம் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.