காஞ்சிபுரம்,
மனித உரிமை மீறல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:- சிபிஎம் மாவட்டச் செயலாளர் சங்கர், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் உத்திரமேருர் பகுதி செயலாளர் சி.பாஸ்கரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன் ஆகியோர் கடந்த வெள்ளியன்று (ஜூலை 13) காலை 10.15 மணி அளவில் மணல்மேடு (மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட) பேருந்து நிலையத்தில் இறங்கி அப்பகுதி விவசாயிகள் அழைப்பின் பேரில் அவர் களை சந்திப்பதற்காக டீக்கடையில் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், “ ஏன் இங்கு நிற்கிறீர்கள். வண்டியில் ஏறுங்கள்’’ என்றனர். அதற்கு, “ எதற்காக நாங்கள் வண்டியில் ஏற வேண்டும்’’ என்று கேட்டோம். உடனே, “ஏறுங்கடா’’ என ஒருமையில் பேசினார்.

படித்த அதிகாரியாகிய நீங்கள் மரியாதை குறைவாக பேசாதீர்கள் என்று சொன்னதற்கு, ஏய். அப்படித் தாண்டா பேசுவேன் என்றார். பிரிட்டிஷ் ஆட்சிபோல் நடக்காதீர்கள் என்று சொன்னதற்கு, ‘ ஆமாண்டா பிரிட்டிஷ் ஆட்சிதாண்டா எறுடா’’ எனக் கூறி அனைவரையும் வண்டியில் ஏற்ற முயற்சித்தார். “எங்களுக்கு கோபம் வந்ததுண்ணா அவ்வளவுதாண்டா ஏறுங்கடா’’ எனக் கூறி எங்களை வண்டியில் ஏற்றி மாகரல் காவல்நிலையத் திற்கு கொண்டு சென்று காவலில் வைத்தார். எங்களது செல்போன்களை பிடுங்கிக் கொண்டார்கள். எங்கள் உறவினர்களுக்குக் கூட எங்கள் கைது பற்றி தகவல் கூறுவதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதபோது, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், மற்றும் காவல்துறையினர் தரக்குறைவாக பேசி, அதிகார துஷ்பிரயோகமாக நடந்து கொண்டுள்ளனர். எங் களை மாலை வரை காவல்நிலையத்திலேயே வைத்திருந்தனர். எனவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.