கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை இந்திய மாணவர் சங்கம் கருப்பு தினமாக அனுசரித்தது.கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக வந்து கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் மலர் வளையம் வைத்து இறந்த குழந்தைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக 94 செம்மரக்கன்றுகளை பெற்றோர்களுக்கு வழங்கினர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி ஆகியோர் தெரிவித்ததாவது –
தனியார் கல்வி நிலைய முதலாளிகளின் லாப வெறியால் இச்சம்பவம் நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது. இனி இச்சம்பவம் எங்கும் நடக்க கூடாது. பள்ளிகள் தனியார் மயமாக்குதலை தடுக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையினால் மாணவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும். எங்கும் தனியார் எதிலும் தனியார் என்ற போக்கில் மத்திய – மாநில அரசுகள் செயல்படும் இச்சூழலில், கல்வியிலும் கை வைக்கும் அபாயம், கல்விக் கொள்கையின் மூலம் உருவாகி உள்ளது. காலப் போக்கில் பல்கலைக்கழகங்கள், தனியார் முதலாளிகளின் கையில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும். தரமான கல்வியில்லாமல் வியாபார நோக்குடன் அவை அணுகப்படுகிறது. எனவே இந்நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு, தனியார் பள்ளிகளின் அதிகக் கட்டண கொள்ளையை முறியடித்து, தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டண நிர்ணயக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அரசு அங்கீகாரம் இன்றி இயங்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூட வேண்டும். தனியார் கல்வி நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின் போது மாணவர் சங்க பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், ராமன், பிரபாகரன், புதுக்கோட்டை திவ்யா, சக்தி, சிவா, அஜித், விக்னேஷ், சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மாணவர்கள் பாதுகாப்பு நாள்
இந்நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஜூலை 16 ஆம் தேதியை மாணவர்கள் பாதுகாப்பு நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்துப் பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: