தீக்கதிர்

வெள்ளத்திலிருந்து காப்பாற்ற இனி கட்டணம் செலுத்த வேண்டும்: உத்தரகண்ட் பாஜக அரசு…!

டேராடூன்:
கனமழை, வெள்ளம் போன்றவற்றில் சிக்கிக் கொண்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில பாஜக அரசு கூறியுள்ளது.

வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடரின் போது, மக்களை ஆபத்திலிருந்து மீட்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இந்த அடிப்படையில்தான், நாட்டிலுள்ள அத்தனை மாநிலங்களும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், பேரிடர் காலத்தில் ஹெலிகாப்டர்களை உபயோகித்து ஒருவர் மீட்கப்படுவாரானால், அந்த நபர் ரூ. 3 ஆயிரத்து 100-ஐ கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார். இதனை உடனடியாக அமலுக்கும் கொண்டு வந்துள்ளார்.

அதிகளவில் வெள்ளச்சேதம் ஏற்படும் மாநிலங்களில் உத்தரகண்ட்டும் ஒன்று எனும் நிலையில், அந்த மாநிலம் தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதுடன், உயிருக்காக போராடும் மக்களிடமே கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்திருப்பது, உத்தரகண்ட் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டிலேயே மீட்புப் பணிக்காக கட்டணம் வசூலிக்கும் மாநிலம் என்றால், அது பாஜக தலைமையிலான உத்தரகண்ட் மாநில அரசுதான் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.