புதுதில்லி:
இந்தியாவிற்கு எதிரான நாசகர காரியங்களில், பிரதமர் மோடியே பாதியை செய்து விடுவதால், மோடியே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யில் இருப்பவர்கள் விரும்புவதாக ஆச்சரியகரமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் துலத்தும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் ஆசாத் துரானியும் இணைந்து, ‘ஸ்பை கிரானிக்கல்ஸ்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.காஷ்மீர் பிரச்சனை, கார்க்கில் யுத்தம், பின்லேடன் படுகொலை, குல்தீப் ஜாதவ் கைது, ஹபீஸ் சயீது, புர்கான் வானி படுகொலை என இந்தியா- பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பிரச்சனைகள் பற்றியும், இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த நூலில் அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

இதில், ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் ஆசாத் துரானி எழுதியுள்ள கட்டுரையில், ‘இந்தியப் பிரதமராக மோடி இருக்க வேண்டும்; அப்போதுதான் தங்களின் வேலை எளிதாக இருக்கும்’ என்று ஐஎஸ்ஐ உளவாளிகளே கருதுவதாக கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.அவர் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:‘இந்தியப் பிரதமர் மோடி சிக்கலான நபர். கடுமையான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்திய பிரதமராக இருப்பதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது; என்று ஐஎஸ்ஐ-யில் இருப்பவர்கள் கருதுகிறார்கள்.

ஏனெனில் இந்தியாவை அழிப்பதற்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை. மோடியின் நடவடிக்கைகளே இந்தியாவை அழித்து விடும். இந்தியாவின் இமேஜையும், உள்நாட்டு சமநிலையையும் மோடி அழித்து விடுவார். இது பாகிஸ்தானுக்கு நன்மையாக அமையும். எனவே, ஐஎஸ்ஐ-க்கு ஏற்ற பிரதமர் என்று நரேந்திர மோடி விரும்பப்படுகிறார்.இதுபற்றி 1998-ஆம் ஆண்டே நான் குறிப்பிட்டேன். இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் கவலைப்பட வேண்டியதில்லை. இஸ்லாமியர்களை வெறித்தனமாக எதிர்க்கக்கூடிய ஒருவர் இந்தியாவில் ஆட்சியில் இருப்பது, பாகிஸ்தானுக்கு கெட்ட விஷயம் கிடையாது; பாஜக-வினர் பாகிஸ்தானுக்கு நன்மையையே செய்வார்கள் என்று அப்போது கூறினேன். அதுதான் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்று ஆசாத் துரானி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: