திருநெல்வேலி;
நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து வெயில் அடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இருந்தபோதிலும் 2ஆவது வாரத்தில் பருவம் மீண்டும் களை கட்டியது. அதிலிருந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் ஞாயிறன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில்  திங்களன்றும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதே போல் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை  திங்களன்று 3ஆவது நாளாக நீடித்தது. அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

புலியருவியில் அதிக அளவு தண்ணீர் விழுந்த போதிலும் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் புலியருவிக்கு சென்றனர். ஏராளமான வாகனங்கள் சென்றதால் புலியருவி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருவியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் பகுதியில் மட்டுமின்றி தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், காற்றும் வேகமாக வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: